Wednesday, August 30, 2017

நாட்டின் 20 மாவட்டங்களில் கடும் வரட்சி நிலவுவதால், 18 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

“கடும் வரட்சியினால் 5,22,857 குடும்பங்களைச் சேர்ந்த 18,09,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, நீர் உட்பட அனைத்து தேவைகளையும் அரசாங்கம் நிறைவேற்றும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் குருநாகல் மாவட்டமே முதல் நிலை வகிக்கின்றது. குருநாகல் மாவட்டத்தில் 78,018 குடும்பங்களைச் சேர்ந்த 2,56,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 68,786 குடும்பங்களைச் சேர்ந்த 2,18,000 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 6,716 குடும்பங்களைச் சேர்ந்த 24,099 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 20,481 குடும்பங்களைச் சேர்ந்த 67,423 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 13,232 குடும்பங்களைச் சேர்ந்த 54,549 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5,708 குடும்பங்களில் 19,783 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,696 குடும்பங்களைச் சேர்ந்த 5,861 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 16,885 குடும்பங்களைச் சேர்ந்த 60,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இதனைத் தவிர இரத்தினபுரி மாவட்டத்தில் 1987 குடும்பங்களைச் சேர்ந்த 7,714 பேரும், கேகாலை மாவட்டத்தில் 1,491 குடும்பங்களைச் சேர்ந்த 4,417 பேரும், பதுளை மாவட்டத்தில் 5,301 குடும்பங்களைச் சேர்ந்த 16,615 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 104,839 குடும்பங்களைச் சேர்ந்த 3,96,468 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 6,189 குடும்பங்களைச் சேர்ந்த 19,011 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 14,258 குடும்பங்களைச் சேர்ந்த 50,562 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 19,714 குடும்பங்களைச் சேர்ந்த 65,405 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33,570 குடும்பங்களைச் சேர்ந்த 1,22,151 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 35,730 குடும்பங்களைச் சேர்ந்த 15,308 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 27,107 குடும்பங்களைச் சேர்ந்த 92,737 பேரும், வவுனியா மாவட்டத்தில் 28,612 குடும்பங்களைச் சேர்ந்த 1,01,914 பேரும், மன்னார் மாவட்டத்தில் 32,548 குடும்பங்களைச் சேர்ந்த 1,15,932 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer