Tuesday, August 22, 2017

அதிமுகவில் பிரிந்து கிடந்த இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிகள் திங்கள்கிழமை இணைந்தன. 3வது அணியாக இருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். தினகரன் அணி நடவடிக்கை குறித்து ஓ.பி.எஸ். அணியில் இருந்த நிர்மலா பெரியசாமியை கேட்டோம்.

தங்களின் ஆதரவை முதல்வர் பழனிசாமி இழந்துவிட்டார். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னரைச் சந்தித்து கடிதம் கொடுத்திருக்கிறார்களே?

ஜெ.வின் தலைமையில் ஒரே கட்சியாக இருந்தபோது இந்த குழப்பங்கள் இல்லை. ஒரே கட்சியாக இருந்தாலும் பல அணிகளாக பிரிந்தபோது கோபதாபங்கள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆகியோர் அப்படித்தான் இருந்தார்கள். இப்போது ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். எங்களுக்குள் எந்த பிரிவிணையும் வராது என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோல தற்போது பிரிந்து இருக்கிற 19 பேரும் விரைவில் வருவார்கள். ஆட்சியை கவிழ்க்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஏதோ ஒரு கோபத்தில் அவர்கள் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும். தனபாலை முதல் அமைச்சராக்க வேண்டும் என்று திவாகரன் கூறியிருக்கிறாரே?

இதெல்லாம் அவரவர் விருப்பத்தை சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன கோபம் என்றால் நாங்கள் உருவாக்கினோம். எங்களுக்கு எதிராக சென்றால், தூக்கிவிட்டு எங்களுக்கு வேண்டிய இன்னொருத்தரை போடுவோம். கொஞ்சநாளில் அவர்களும் வேண்டாதவர்களாக ஆவார்கள். திருப்பி இன்னொருத்தரை மாற்றுவோம். இப்படி கட்சியும், ஆட்சியும் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்குன்னு சொல்ல வராங்க. இதுவரை அவர்கள் சொன்னது நடந்திருக்கலாம். இனிமேலும் அது நடக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

19 பேரும் அவர்களுக்கு ஆதரவாக கடிதம் அளித்துள்ளார்கள். ஆனால் 19 பேரின் மனநிலையும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் வரை அப்படியே இருக்குமா. ஜெ. வால் உருவான ஆட்சி கவிழ அவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்களா?

இரு அணிகளும் இணைந்தால் தினகரன் அணி என்ன செய்யும் என்பது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.க்கு தெரியும். அதற்கு ஒரு திட்டம் இல்லாமல் இணைந்திருக்க மாட்டார்கள். அதனை வெளியில் சொல்லிக்கொண்டும் இருக்கமாட்டார்கள். தினகரன் அணி ஒரு ஸ்டெப் எடுத்தால், இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் என்ன ஸ்டெப் எடுப்பார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை நீக்க வேண்டும் என்பதுதான் இணைப்பில் முக்கியமாக இருந்ததா?

இணைப்பில் இதுதான் முக்கியமாக இருந்தது. அவர்களை நீக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக இருந்தது.

பொதுக்குழுவைக் கூட்ட வேண்டிய அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு என தினகரன் அணியினர் சொல்கிறார்களே?

பொதுச்செயலாளர் நியமனமே செல்லுமா, செல்லாதா என்ற கேள்விக்குறியாக உள்ளது. செல்லாது என்ற பட்சத்தில் பொருளாளர், அவைத் தலைவர், தலைமை நிலையச் செயலாளருக்கும் அதிகாரம் இருக்கிறது என்று விசயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். பொதுச்செயலாளர் நியமனமே செல்லுமா என கேள்விக்குறியாக இருக்கும்போது அவர்கள் சொல்லும் மற்ற விதிகள் பொருத்துமா.

இ.பி.எஸ். தலைமையிலான ஆட்சி ஊழல் ஆட்சி. அதனை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாக ஓ.பி.எஸ். அறிவித்தாரே. 10 நாளில் எப்படி மனம் மாறியது. அதே ஊழல் ஆட்சியில் துணை முதல்வரானார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகிறதே?

ஜெ. மரணம் நடந்த விதம் தாங்க முடியாமல் அதற்கான நீதி விசாரணை கேட்டுதான் ஓ.பி.எஸ். வெளியே வந்தார். அதற்கு பிறகு நிறைய ஊழல் புகார்கள் அரசு மீது வந்தது. அப்போது எதிரணியில் இருந்தோம் கேட்டோம். இப்போது ஓரணியில் இருக்கிறோம். இனி நல்ல அரசை கொடுப்போம். இணைப்பில் நேற்று அவர்கள் பேசும்போதுகூட விசுவாசமாக இருப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் நல்ல பதவிகள் கிடைக்கும் என்றனர். ஊழல் குற்றச்சாட்டு இருந்தது உண்மைதான். ஒரு கண்ட்ரோல் இல்லாமல் இருந்தது. அப்ப ஓ.பி.எஸ். சொன்னது உண்மைதான். இப்ப இணைந்தது உண்மைதான். இனி ஒருங்கிணைந்த அதிமுகவால் ஒரு நல்ல ஆட்சியை தரப்போகிறார்கள் என்பது உண்மைதான்.

தினகரனை எதிர்த்து ஆட்சியை உங்கள் அணி நடத்துமா. துணிவு இருக்கிறதா?

இருக்கிறது. டிடிவி அணியில் இருந்து இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை ஏற்கனவே எதிர்பார்த்திருப்பார்கள். எதிர்பார்த்ததினால் அதனை சுலபமாக எதிர்கொள்வார்கள். எவ்வளவு பெரிய கட்சியை இணைத்தவர்களால் இதையும் எதிர்கொள்ள முடியும். அதற்கான திறமையும், வலிமையும் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் ஆகியோருக்கு உள்ளது.

அணியின் பிரிவுக்கும், இணைவுக்கும் டெல்லிதான், பாஜகதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே?

எதிர்க்கட்சிகள் அவர்கள் மனதில் தோன்றுவதை பேசுவது வழக்கம். ஒரு கட்சியில் பிரச்சனை என வரும்போது அதனை தீர்ப்பதற்கு நம்மைவிட ஒரு வலுவானர்கள் வருவார்கள்தானே. அப்படிதான் பார்க்க வேண்டும். அதனைவிட்டுவிட்டு அதிமுகவை ஒழிக்கப்போகிறார்கள். அதிமுகவை எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என நினைக்கக்கூடாது. ஜெ. மீதுள்ள அபிமானத்தில் பிரதமர் தனிப்பட்ட முறையில் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று நினைக்கிறார் என் நான் நம்புகிறேன்.

கடந்த 8, 9 மாதங்களாக அதிமுக பொதுக்கூட்டங்கள் நடக்காததால் பேச்சாளர்கள் கஷ்டப்பட்டார்கள் என தகவல் வந்தது. இனி பொதுக்கூட்டங்கள் நடக்குமா. பேச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?.

உண்மையிலேயே இது ஒரு வருந்ததக்க விசயம். ஜெ. இருந்தபோது பேச்சாளர்களுக்கு மிகப்பெரிய கவுரவம் கொடுத்தார்கள். ஜெ.தான் கலைக்குழு, பேச்சாளர்களை உருவாக்கி அவர்களிடம் எப்படி கட்சியினர் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்று அவர்தான் உருவாக்கினார். கட்சியில் பேச்சையே நம்பியிருந்தவர்களுக்கு நிறைய கஷ்டங்கள் வந்தது. அதுவும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நேரத்தில் நிறைய பொதுக்கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். இனி பொதுக்கூட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று நம்புகிறேன். நேற்றுதான இணைந்திருக்கிறார்கள். இனி அடுத்தடுத்த திட்டங்கள் போடுவார்கள். கொஞ்சம் டைம் வேணும். நிச்சயமாக கைவிடமாட்டார்கள்.

-வே.ராஜவேல்
nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer