Saturday, July 15, 2017

ISIS தீவிரவாதிகளின் வசமிருந்த ஈராக்கின் முக்கிய நகரான மோசுலை அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலின் உதவியுடன் கடந்த வாரம் ஈராக்கிய படைகள் கைப்பற்றி இருந்தன.

இது ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான முக்கிய வெற்றியாகக் கணிக்கப் பட்டுள்ள போதும் அவர்களுடனான போர் இன்னமும் முற்றுப் பெறவில்லை என அமெரிக்க கூட்டணி நாடுகளின் மூத்த தூதரான பிரெட் மக்குர்க் என்பவர் வாஷிங்டனில் வைத்து ஊடக நிருபர்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் இப்போரில் அடுத்த இலக்குகளை அடைவதற்கு எமது முயற்சிகளை நெறிப்படுத்துவதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதைவிட 2 ஆம் உலகப் போருக்கு பின்னதாக ஈராக்கின் மோசுல் நகரைத் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றுவதே மிகக் கடினமான இராணுவ முன்னெடுப்பாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடினமான போரினால் மீட்கப் பட்ட மோசுல் நகரில் போர் நடந்த போது அங்கு இருந்த மக்கள் தொகையே 1.5 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மிக நீண்ட கால அடிப்படையில் கட்டி எழுப்பப் பட வேண்டிய மோசுல் நகரின் கட்டமைப்புக்காக ஈராக் அரசு உலக வங்கியின் உதவியை நாடியுள்ளது.

தற்போது ISIS வசமிருக்கும் ரக்கா மற்றும் சிரியாவின் ஏனைய பகுதிகளை மீட்பது ஈராக்கை விட சிக்கலான பணி என்று தெரிவித்த மக்குர்க் இப்பகுதிகளில் முதலில் மனிதாபிமான நடவடிக்கைகளை அமுல் படுத்த வேண்டியதே முதற் தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வரும் ISIS இன் தற்கொலைத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து கடினமான போரில் ஈடுபட வேண்டி இருப்பினும் நிலமை மிக மோசமடைந்தால் மாத்திரமே மேலதிக வெளிநாட்டுப் படையினர் சேர்க்கப் படுவர் என்றும் மக்குர்க் தெரிவித்தார்.

ISIS இற்கு எதிரான போரில் அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் குழுவில் புதிதாக இணைந்த நாடு எத்தியோப்பியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer