Saturday, July 22, 2017

உறுதிமிக்க அதிகாரியாக கடமையுணர்வு வீராங்கனையாக தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ரூபா ஐ.பி.எஸ்.

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியான ரூபா, பரப்பன அக்ரகார சிறையில் சசிகலா அனுபவிக்கும் சொகுசு வசதிகளை அம்பலப்படுத்தியவர். அதன் காரணமாக, பணி இடமாற்றம் செய்யப்பட்டவர். அரசியல் ரீதியாக அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், சிறையில் சசிகலாவுக்காக செய்யப்பட்டிருக்கும் வசதிகளை அங்குலமாக அங்குலமாக விவரிக்கிறார்.

அலைபேசி வாயிலாக நக்கீரனுக்கு ரூபா ஐ.பி.எஸ் அளித்த பேட்டி இதோ...

கேள்வி: சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்படும் சிறப்பு சலுகைகள் பற்றி முதன் முதலில் உங்களுக்கு தெரிய வந்தது எப்பொழுது?

பதில்: நான் இந்த பொறுப்பில் ஜனவரியில் நியமிக்கப்பட்டு, பின்பு விடுப்பில் இருந்தேன். அப்பொழுதே சிறையில் நடக்கும் சில விஷயங்களைப் பற்றி எனக்கு தகவல்கள் வந்தன. பத்திரிகையாளர்களும் என்னை அணுகினர். சசிகலாவுக்கு அளிக்கப்படும் சலுகைகள், கவனிப்புகள் பற்றியும் கேள்விப்பட்டேன். பின், பரப்பன அக்ரஹாரா  சிறையில் மருத்துவர் ஒருவர் கைதிகளால் தாக்கப்பட்டார். குடியரசு தினம், சுதந்திர தினத்தை முன்னிட்டு நன்னடத்தையின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுவதில் முறைகேடுகள் இருப்பதாகவும்,  கைதிகள் போதைப் பொருள்கள் வைத்திருப்பதாகவும் செய்திகள் வர, நான் சிறை அதிகாரிகளிடம் இது குறித்து அறிக்கை கேட்டேன். அறிக்கை வர தாமதமானதால் ஜூன் 28 அன்று சிறைக்கு சென்று ஆய்வு செய்தேன். அப்பொழுது தான், சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறைக்கும் சென்றேன்.

அங்கு பார்த்தபொழுது சசிகலாவுக்கென ஐந்து அறைகள் கொண்ட   ஒரு வராண்டாவே ஒதுக்கப்பட்டு இருந்தது. அவரை சந்திக்க வருபவர்களிடம் பேச தனியறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சசிகலா சீருடையும் அணிவதில்லை.  சிறை அதிகாரிகளிடம் காரணம் கேட்டபொழுது, 'இதெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள்' என்று கூறினர். சசிகலாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை, நீதிமன்றம் எந்த சிறப்பு அனுமதியும் தரவில்லை. பின் எதற்காக அவருக்கு இந்த ஏற்பாடு? அப்படியே பாதுகாப்பு என்றாலும், சிறைக்காவலர்கள் தான் 24 மணி நேரமும் அங்கு இருக்கின்றனரே?

கேள்வி: சசிகலாவின் உறவினர் தினகரன், இதெல்லாம் பரப்பன அக்ராஹாரா சிறையின் வழக்கமான நடைமுறை  தான், சசிகலா தான் விரும்பியதை அணியலாம்  என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளாரே?

பதில் : இல்லை, கர்நாடக சிறை விதிமுறைகளின் படி, அவர் சீருடை அணிய வேண்டும். அவர் கர்நாடக சிறையில்  இருக்கிறார், தமிழ்நாட்டில் இல்லை. இங்கு அவர் இஷ்டப்படி இருக்கமுடியாது. சிறை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தண்டனைக் கைதிகள் அனைவரும் சீருடை அணியவேண்டும்.

கேள்வி: விதிமுறைகளை கடைபிடிக்காத கைதிகளுக்கு என்ன தண்டனை?

பதில்: பலவிதமான தண்டனைகள் உண்டு. வேறு சிறைக்கு மாற்றப்படலாம். நீதிமன்றத்தில் முறையிடப்படவேண்டும். நீதிமன்றம் முடிவெடுக்கும்.

கேள்வி: அவருக்கு தனியாக சிறப்பு உணவு வழங்கப்படுகிறதா ?

பதில்: ஆம், அவர் முதல் தளத்தில் இருக்கிறார். தரைத்தளத்தில் சமையலறை உள்ளது. அங்கு, அவருக்கென ஆட்கள் நியமிக்கப்பட்டு, அவர் விரும்பிய உணவு சமைத்துத்  தரப்படுகிறது.  150 அடி நீளமுள்ள வராண்டாவின் முடிவில் யாரும் நுழைய முடியாவண்ணம் தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.  அவர் ஒருவருக்கு ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டு, வசதியாக இருக்கவைக்கப்பட்டுள்ளார்.

கேள்வி: நீங்கள் சசிகலாவின் அறையில், அவரை சந்தித்தீர்களா?

பதில்: ஆம், நான் அவரது அறைக்கு சென்றேன். நான் பார்த்தபொழுதும் சசிகலா, இளவரசி இருவரும் காட்டன் நைட்டி அணிந்திருந்தனர். அவர்களது அறையில் சொகுசான பஞ்சு மெத்தைகளும் கட்டிலும் இருந்தன. உள்ளே, டீவியும் இருந்தது. அவரைப் பார்க்க வருபவர்களை சந்திக்க, பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் சுழல் நாற்காலி, மேசை அனைத்தும் இருக்கிறது. நீதிமன்றத்தால் முதல் வகுப்பு மறுக்கப்பட்ட ஒரு கைதிக்கு இத்தனை வசதிகள் செய்து தர அவசியம் என்ன? பொதுவாக பார்வையாளர்களை சந்திக்கும் இடத்தில் கைதிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் இரும்புக்கம்பிகளால் ஆன தடுப்பு இருக்கும்.  கேமராவால் பதிவு செய்யப்படும். ஆனால் அந்தப் பதிவுகளில் அவர்  இருக்கமாட்டார். ஏனெனில், அவரது சந்திப்புகள் சிறப்பு அறையில் நிகழ்ந்திருக்கின்றன.

கேள்வி: அவருக்கு தனி தொலைக்காட்சி இருக்கிறதா?

பதில்: ஆம்...புதிய LED டீவி. மற்ற கைதிகளுக்கு, 30, 40 பேருக்கு ஒரு பழைய ஓட்டை டீவி இருக்கையில், இவர் ஒருவருக்கு தனியாக எப்பொழுதும் பார்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கைதிகளின் டீவி பெரும்பாலும் வேலை செய்யாது. சிறையில் ஒவ்வொரு வராண்டாவிலும் 30, 40 பேர் இருக்கும்பொழுது, இவருக்கென ஒரு முழு வராண்டாவையும் ஒதுக்கி, ஐந்து அறைகளையும் திறந்தே வைத்துள்ளனர். ஒரு அறையை படுக்கை அறையாகவும், மற்ற அறைகளில் பொருள்களையும் வைத்துக்கொண்டு, சுதந்திரமாக, வசதியாக நடமாடி வருகிறார்.  

கேள்வி: இத்தனை வசதிகள் வழங்கப்பட என்ன காரணம்?

பதில்: விசாரணை நடந்து வருகிறது. கண்டிப்பாக அதிகாரிகளுக்கு ஏதேனும் கொடுக்கப்பட்டிருக்கும். நான் கேள்விப்பட்டபடி, ஆஸ்திரேலியா பிரகாஷ் என்னும் NRI ஒருவர் மூலம், 2 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நபர், தினகரனுக்கும் பல அரசியல் புள்ளிகளுக்கும் நெருக்கமானவர். அவர் பல விஷயங்களிலும் இடைத்தரகராய் செயல்பட்டிருக்கிறார்.  

கேள்வி: பரப்பன அக்ரஹாரா சிறையில் முன்பு ரெட்டி சகோதரர்கள் உட்பட பலருக்கும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதா ?

பதில்: ஆம்...நானும் அறியவந்தேன். ரெட்டி சகோதரர்கள் இருந்த பொழுது மாதக்கணக்கில் அவர்கள், அருகில் உள்ள 'கொலம்பியா ஏசியா' மருத்துவமனையில் ஐந்து நட்சத்திர விடுதி தரத்தில் உள்ள அறைகளில் இருந்துள்ளனர். இதெல்லாம் நடக்கிறது தான். சிறையில் என்ன நடக்கிறது என்பது வெளியே தெரிவதில்லை.

கேள்வி: உங்களை இடமாற்றம் செய்துவிட்டதை எப்படி உணருகிறீர்கள்?

பதில்: இது அரசியல் ரீதியாக நடந்திருக்கிறது. சட்டப்படி ஒரு வருடமாவது நான் அந்த பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால், அதற்குள் மாற்றிவிட்டனர். நான் உருவாக்கிய ஆதாரங்களை நானே எப்படி அழிப்பேன்? அரசியல் தான்.  என் இரண்டாவது அறிக்கையில் இன்னும் சில விவரங்களை கொடுத்துள்ளேன். சிசிடிவி கேமரா  பதிவுகளை ஆய்வு செய்ய கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும். ஆனால், அவர்கள் அவற்றை அழிக்கவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். வினய் குமார் விசாரணை தொடங்கிவிட்டதென்று அறிகிறேன். ஆனால், என்னை எதுவும் தொடர்பு கொள்ளவில்லை.

கேள்வி: வேறு ஆதாரங்கள் இருக்கிறதா உங்களிடம்?

பதில்: ஆம்... இன்னும் சில போட்டோக்களும், வீடியோக்களும் இருக்கின்றன. தேவைப்பட்டால் வெளியிடுவேன்.

nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer