முன்பெல்லாம் ஏழைகள், தொழிலாளிகள், கடவுள் பக்தர்கள் என திரைப்படங்கள் குறிவைக்கும் குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருந்தது. கதாநாயகனை அவர்களுள் ஒருவராய் காட்டி, அவர்களுக்காக பல காட்சிகளை வைத்து, அவர்களுக்கு ஆதரவாக ஆவேசமான வசனங்களைப் பேசவைத்து, கைதட்டல் பெறும் படங்கள் வந்தன. இப்பொழுது அந்த 'டார்கெட்' வரிசையில் பொறியியல் பட்டதாரிகளும் சேர்ந்துள்ளனர். அதுவும் தமிழ்நாட்டில், திரும்பிய திசையெல்லாம் பொறியியல் படித்தவர்களைக் காண முடியும் என்பதால், அவர்களையும் , பொறியியல் கல்லூரிகளின் நிலையையும் கதையில் சேர்த்துக்கொள்ளும் படங்கள் வருகின்றன. மிகத் தீவிரமான இந்தப் பிரச்சனையை எவ்வளவு தூரம் பேசியிருக்கிறார்கள் , எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பது வேறுபடுகிறது. 'இவன் தந்திரன்', பொறியியல் கல்லூரிகளும் கல்வித்துறையும் இணைந்து, மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவதைக் கதையாகக் கொண்ட படம்.
பொறியியல் படிப்பை, பாதியில் விட்டுவிட்டு தனக்குள்ள, கணினி தொழில்நுட்பத் திறமையை வைத்து, 'ரிச்சி ஸ்ட்ரீட்'டில் கடை வைத்திருக்கிறார் கெளதம் கார்த்திக். நண்பர் ஆர்.ஜே.பாலாஜி அவருடன் இருந்து அவருக்கும் சேர்த்து பேசுகிறார். கல்வி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் 'சூப்பர்' சுப்பராயனின் வீட்டில் ஒரு வேலை செய்துகொடுத்து, அதற்கான ஊதியத்தைப் பெற அடிக்கடி அங்கு செல்ல, பொறியியல் கல்லூரிகளுக்கும், அவருக்கும் நடக்கும் பரிமாற்றங்களும், அதனால் பாதிக்கப்படும் மாணவர்களைப் பற்றியும் தெரிய வந்து, கெளதம் என்ன செய்கிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதே, R.கண்ணன் இயக்கியிருக்கும் 'இவன் தந்திரன்'. படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்.ஜே.பாலாஜியும் திகட்டத் திகட்ட அவர் பேசும் வசனங்களும். ஒரு கட்டத்தில் திகட்டினாலும், சிரிக்க வைக்கின்றன. 'ஓலா, ஊபர், ஆட்டோ' , கூவத்தூர் ரிசார்ட், நட்சத்திர கிரிக்கெட் வர்ணனை, நாதஸ்வரம் கோபி, என சமீபகால விஷயங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. படத்தின் பொதுவான பலமும், நிகழ் காலத்தின் பிரச்சனைகள், சம்பவங்கள் பலவற்றையும் தொட்டுச் சென்றிருப்பதே. நகைச்சுவை கலந்து அவற்றைப் பேசும் வசனங்களும் உதவியிருக்கின்றன. கெளதம், ஷ்ரதா இடையிலான காதல் அழகாக, வித்தியாசமாக தொடங்கி, வழக்கம் போல முடிகிறது.
கெளதம் கார்த்திக், படங்கள் தேர்வு செய்வதில் நல்ல முன்னேற்றம் காட்டுகிறார். நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி நீளமாக பேசிக்கொண்டிருக்கும் போது, கெளதம் முகத்தை எப்படி வைத்துக்கொள்வது என்று சற்று குழம்பியிருக்கிறார். தான் ஆவேசமாக வசனம் பேச வேண்டிய போதும் குழந்தைத்தனமாகப் பேசுகிறார். ஷ்ரதா ஸ்ரீநாத், சற்று வித்தியாசமான அழகு. நடிப்பிலும் சிறப்புதான் என்றாலும் சில இடங்களில் வசனத்துக்குப் பொருந்தாத உதட்டசைவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 'சூப்பர்' சுப்பராயன், "முன்னாடிலாம் பத்திரிகைல எவன் எழுதுறான்னு தெரியும், போய் அடிப்போம்...இப்போ எவன் மீமீஸ் போட்றான்னே தெர்லயே", என்று புலம்பும் படிக்காத மந்திரியாய் முழு வில்லத்தனம் காட்டுகிறார். வெறுப்பை ஏற்படச்செய்வதில் வெற்றி பெரும் நடிப்பு.
சில தோல்விகளுக்குப் பின், இயக்குனர் R.கண்ணன் ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கிறார். பணமதிப்பிழப்பில் இருந்து, மாணவர் போராட்டம் வரை நிகழ் காலத்தின் பல விஷயங்களையும் சேர்த்து, கிடைத்த இடைவெளியிலெல்லாம் ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவை வசனங்களை வைத்து, தொழில்நுட்பத்தையும், சமூக வலைத்தளங்களின் வீச்சையும் பயன்படுத்தி ஒரு முழு வெற்றிப்படத்தை உருவாக்கிட முயற்சி செய்திருக்கிறார். அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார். பொறியியல் படித்தாலே வேலை கிடைக்காது, அது பாவம் என்ற தொனியில் பல வசனங்கள், காட்சிகள், அதுபோல் திறமை இருப்பவர்கள் எல்லாம் திறமைக்கு குறைவான வேலைதான் பார்க்கிறார்கள் என்பது போன்ற சித்தரிப்பு, தேவையா? தமிழகத்தின் பிரச்சனை பொறியியல் படித்தும், தரமான கல்லூரிகள், கற்பித்தல் இல்லாமையால், மாணவர்களுக்கு திறமையும் தன்னம்பிக்கையும் குறையாக இருப்பதே. அதை விடுத்து, திறமை உள்ள மாணவர்கள் அனைவரும் ஹோட்டலிலும் வேறு வேலைகளிலும் இருப்பது போல் காட்டி படம் எடுப்பது, பட்டதாரிகளை இன்னும் தங்கள் நிலை உணர்ந்து, திறமைகளை வளர்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்து மாற்றிவிடும். VIP இதைத்தான் செய்தது. அதுபோல, என்னதான் தொழில்நுட்ப திறமையாளராய் இருந்தாலும், சாலை எங்கும் சென்று, வேகத்தடையில் சோதனைக்கருவி வைப்பதெல்லாம் சற்று அதிகமாகத்தான் போகிறது. படம் முடியும் பொழுது இருக்கவேண்டிய தாக்கம் பெரிதாய் இல்லை.
S.S.தமன் இசையில் பாடல்களின் தடம் தெரியவில்லை, முடிந்தவுடன் மறைந்துவிடுகின்றன. பின்னணி இசை நன்று. பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்துகிறது. கணினிக்குள் நடக்கும் செயல்பாடுகளை திரையில் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் அளவாக, அழகாக இருக்கின்றன. இவன் தந்திரன், தாக்கம் குறைவு , பொழுது போக்கு அதிகம்...!!
Saturday, July 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment