Saturday, July 8, 2017

"சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்க்ஷன்ஸ், ஜெய்பீம் மன்றம் இணைந்து மஞ்சள் என்ற தலைப்பில் தவிர்க்கப்பட்டவர்கள் என்ற நூலைத்தழுவி, நாடக நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி, நான் எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், இது எனக்கு நிறைய உணர்ச்சிவசப்பட வைக்குற மேடையாக இருக்கிறது. நான் இதை நாடகமாக பார்க்கவில்லை. நிறைய நிஜங்கள், காலம்காலமாக நம்முள் இருக்கும் மனக்குமுறல், வலி, வேதனை அனைத்தையும்  இங்கு கொட்டப்பட்டது என்றுதான் நினைக்கிறேன்.

நான் கடந்து வந்த மனிதர்களை எல்லாம் எனக்கு முன்னால் நினைவுக்கு கொண்டுவந்தது இந்த படைப்பு. எங்கள் ஊரில் நான் பார்த்த குட்டியப்பன், புண்ணியவதியம், மாசாணம் இப்படி பல பேர் நினைவிற்கு வந்தார்கள். நானும் என் நண்பர்களும் சேர்ந்து சாதியை ஒழிப்போம், மனிதம் வளர்ப்போம் என்றொரு நாடகத்தை நடத்தினோம். அந்த நாடகத்துக்காக சுற்றிவளைக்கப்பட்டு, ஆதிக்க ஜாதியினராலும், மேல் ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்களாலும் நாங்கள் துரத்தப்பட்டோம். அன்றைக்கு எதிர்த்து அடிப்பதற்கு சக்தி இல்லை. ஆனால், இன்றைக்கு இந்த படைப்பின் மூலமாக எங்களை துரத்திய ஒவ்வொருவரின் முகத்தில் காரி துப்பிய சந்தோஷம் எனக்கு கிடைத்தது.

ஐந்து நிமிடம் ஒருவரிடம் பேசும்போதே அவர்களினுடைய சாதியை சொல்லிவிடுகிறார்கள் இல்லையெனில் நீங்கள் எந்த சாதி என்று கேட்டுவிடுகிறார்கள். அப்படி ஒரு கேவலமான சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் சாதியம் குறித்த விவாதங்களைக் கையில் எடுப்போம், ஒரு பெரிய படைப்பு படைப்போம் என்றொரு போராட்டத்துக்கு ஒரு ஆய்வு புத்தகத்தை எடுத்தோம். தென்னிந்திய குலங்களும், குடிகளும் என்ற புத்தகம் அது. 7 பகுதிகளை உடையது. அதை எடுத்து ஆய்வு செய்த போது தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக 423 சாதிகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு சாதிகளுக்குள்ளும் 7 கிளை சாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளை சாதிக்கு 10 தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த 10 தலைவர்களுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள். இந்த முரண்களுக்குள் எங்கு இருக்கிறான் தமிழன்? எங்கு இருக்கிறான் மனிதன்? சாதி வேண்டாம் என்று சொல்பவனே ஒரு சாதி கட்சிக்கு தலைவனாக இருக்கிறான். இதுதான் நம் சூழல். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளிகூடத்திலயே நீ எந்த சாதி என்று கேட்கிறான். இதுதான் நம் முரண்பாடு.

இதை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் எழ வேண்டும். இளைஞர்களால் தான் சாதியை ஒழிக்க முடியும். இந்த ஆய்வில் ஒன்று கண்டுபிடித்தோம்; மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு சாதியிலும், சாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

மனிதம் வளர்ப்போம், நாம் வெல்வோம்...

0 comments :

Post a Comment

 
Toggle Footer