Thursday, July 20, 2017

சேரி என்றால் மக்கள் கூடிவாழும் நிலம் எனப்பொருள்படும். பொதுவாக சேரிப்பகுதி தாழ்ந்த, சூழலியல் சிக்கல்கள் நிறைந்த பகுதியாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக பட்டியலின மக்கள் அதிகம் வாழும் பகுதியாக அது இருக்கிறது. தொடர்ச்சியாக சமூகத்தில் சேரிவாழ் மக்கள் என்றால் இழிவானவர்கள், மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டு வரும் இந்த சூழலில், தமிழகத்தில் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் இது தொடர்ந்திருக்கிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்ற ஜூலியானாவை சீண்டி, அனைத்து தரப்பினராலும் விமர்சனத்திற்குள்ளானவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், சகபோட்டியாளர் நடிகை ஓவியாவை ‘ஓவியா விஷம்’ என்றும், ‘சேரி பிஹேவியர்’ என்றும் பேசுவது மாதிரியான காட்சிகள் வெளியாகின. இது பொதுத்தளத்தில் இயங்கிவரும் பலரின் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல கண்டனக்குரல்கள் காயத்ரி ரகுராமை நோக்கி எழுப்பப்பட்டன.

அவர்மீது வழக்குதொடர்ந்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடிவரும் எவிடென்ஸ் கதிர், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் பல விஷயங்களை பரபரப்பிற்காக ஒளிபரப்புவதாக தகவல்கள் வருகின்றன. இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவரின் மீது நேரடியாகவும் வழக்குப்பதியலாம். அல்லது சென்னையில் இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள வழக்கறிஞர்களுடன் சேர்ந்து இணைப்பு வழக்காகவும் பதியலாம். எஸ்.இ/எஸ்.டி திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்- 2015 என்ற சட்டத்தின் படி, பட்டியலின மக்கள் குறித்து சுவர்களில் எழுதியோ, பரப்புரை செய்தோ, பிரச்சாரம் செய்தோ சாதிரீதியிலான பாகுபாடுகளை ஏற்படுத்துபவர்கள் மீது வழக்கு பதியலாம். அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஒருவரின் பண்பாடு, அடையாளத்தை ஏற்கனவே தெரிந்திருந்து அதுகுறித்து விரோதமாக பேசினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் பார்வையாளர் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் இமேஜ் என்ற மோசமான அரசியல் மக்கள் முன் ‘பிக்பாஸ்’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை உபயோகித்து, குறிப்பிட்ட சில மக்களை இழிவானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துபவர்களின்மீது வழக்கு தொடராமல் எப்படி இருக்க முடியும்? காயத்ரி ரகுராம் பேசிய காட்சிகளில் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை எதிர்ப்பு கிளம்பியவுடன் நீக்கிவிட்டார்கள். வெறும் விளம்பரத்தை வைத்துமட்டும் வழக்கு தொடர முடியாது. அதன் முக்கிய காட்சிகளை சேகரிக்க முயற்சித்து வருகிறோம்.

விஜய் டிவியில் நீயா நானா என்ற பாசிட்டிவ் இமேஜ் காட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி தற்போது நீர்த்துப் போய்விட்டது. அந்த சேனலின் பல நிகழ்ச்சிகள் காலங்கடந்தவையாக இருக்கும் சூழலில், இதுமாதிரியான நெகட்டிவ் இமேஜ் உருவாக்கும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து கல்லா கட்ட நினைக்கிறார்கள். மக்கள் இதனை முதலில் புறக்கணிக்க வேண்டும். சேரி என்றால் சாதி சார்ந்த மக்கள் இருக்கும் இடம் என்பதைத் தாண்டி, ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் இருக்கிறது. சென்னையில் பெரும்சேரி என்ற பகுதியில் பலதரப்பட்ட, பலசாதி ஏழைமக்களும் வாழ்கிறார்கள். அவர்களையும் சேர்த்தே இழிவுபடுத்துவதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பவர்களை இழிவுபடுத்தியதற்காக இதை எதிர்த்து காயத்ரி ரகுராம், விஜய் டிவி, தொகுத்துவழங்கும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் அழுத்தம் கொடுத்து வழக்குதொடர ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் தகவல்கள் வெளிவரும்’ என்கிறார் உறுதியாக.

பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்த நாட்டில், பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில், குறிப்பிட்ட சில மக்கள் கூட்டத்தை இழிவானவர்கள், மோசமானவர்கள் எனச்சொல்லி எத்தனையோ காலமாக தொடர்ந்துவரும் குரோத சித்தரிப்பு மனநிலையின் ஒட்டுமொத்த வெளிப்பாடே காயத்ரி ரகுராமின் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தைப் பிரயோகம். தெரியாமல் சொன்னேன் எனக்கூறி தப்பித்துவிட முடியுமா என்ன?

0 comments :

Post a Comment

 
Toggle Footer