Tuesday, July 18, 2017

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெறுகின்றது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் வாக்களிக்கின்றார்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், அடுத்த வாரம் முடிகிறது. இதையொட்டி புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17ஆம் திகதி (இன்று) நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணியும், எதிர்க் கட்சிகள் அணியும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டன. இறுதியில் இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில், பீகார் மாநில கவர்னராக இருந்து வந்த ராம்நாத் கோவிந்த் (வயது 71) பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் (72) நிறுத்தப்பட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை கடந்த 23ஆம் திகதி பாராளுமன்ற மக்களவை தலைமைச்செயலாளர் அனுப் மிஷ்ராவிடம் தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை சென்ற 28ஆம் திகதி தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்தது. இரு வேட்பாளர்களும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

இந்த தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். (பாராளுமன்ற உறுப்பினர்களில் 543 பேர் மக்களவை உறுப்பினர்கள், 233 பேர் மாநிலங்களை உறுப்பினர்கள்).

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலும், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்திலும், இதே போன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் வாக்குரிமை பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் பாராளுமன்றத்துக்கு இன்று வருவதாலும், மழைக் கால கூட்டத்தொடர் தொடங்குவதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளும், வாக்குச்சீட்டுகளும், பிற சாதனங்களும் போய்ச்சேர்ந்து விட்டன. இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. வாக்குப்பதிவை தேர்தல் ஆணையகத்தின் 33 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer