Saturday, July 8, 2017

கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இப்படத்தில் விக்ரம் நடிப்பது உறுதி செய்யப்பட்டு அவர் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஹீரோயின் கதாபாத்திரமும் ஆள்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதாநாயகியாக அணு இம்மானுவல் தேர்வுசெய்யப்பட்டு போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. அவரது கால்ஷீட் இடையூறு காரணங்களால், பின்னர் ரித்து வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துருவ நட்சத்திரம் படத்தின் முக்கியமான பகுதிகளை ஐரோப்பாவில் படப்பிடிப்பு செய்து வருகின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஐரோப்பாவில் படக்குழுவினருடன் இணைந்துள்ளார். முதலில் படத்தின் ஒளிப்பதிவாளராக ஜோமோன் டீ ஜான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதேபோல், சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கால்ஷீட் இடையூறால் படத்தை விற்று வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் சில பகுதிகளை அமெரிக்காவிலும், தமிழகத்தில் குன்னூரிலும் படமாக்கி உள்ளனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா, பார்த்திபன் போன்ற பிரபல நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார்? என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். அண்மையில் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. துருவ நட்சத்திரம் படத்தின் சில காட்சிகளை தற்போது பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்பும் பல்கேரியாவில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப்படம், கௌதம் மேனனுக்கு திரையுலகில் முக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தக்கூடும். கௌதம் மேனன் மற்றும் விக்ரம் இருவரும் முதன்முதலாக இணையும் இந்தப்படத்தை, இந்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer