Saturday, July 8, 2017

‘ஜி 20’ மாநாட்டில் பங்கெடுக்கச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜின் பிங்குக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இருவரும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் எல்லையை ஒட்டியுள்ள டோகா லா பகுதியில் சீனா சாலைப்பணிகளை தொடங்கியது. இந்த பணிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற நோக்கில் இந்திய வீரர்கள், அந்த பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு நாடுகளும் சிக்கிம் எல்லையில் தங்கள் படைகளை குவித்து வருகின்றன. ஆனால் இந்தியா, தனது படைகளை வாபஸ் பெறாவிட்டால் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மிரட்டியுள்ள சீனா, இந்திய எல்லை அருகே போர் ஒத்திகையும் நடத்தி வருகிறது. இதனால் அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி 20 மாநாடு நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமைப்புகளில் இந்தியாவும், சீனாவும் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியா பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் ஜெர்மனி சென்றுள்ளனர்.

ஆனால் இந்த நிகழ்வுகளின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை என இந்தியா அறிவித்தது. இதைப்போல மோடி-ஜின்பிங் சந்தித்து பேசுவதற்கான சூழல் தற்போது இல்லை என சீனாவும் கூறி இருந்தது.

இந்த நிலையில் ஹம்பர்க் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நேற்று நடந்தது. சீனா ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று, எதிர்வரும் 9வது பிரிக்ஸ் மாநாட்டின் நோக்கம் மற்றும் அதற்கான தயாரிப்பு குறித்து விவாதித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த நிகழ்வில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக இரு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி, இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தமைக்காகவும், தன்னை வரவேற்றமைக்காகவும் ஜின் பிங்கை பாராட்டினார். அவர் கூறுகையில், ‘ஜின் பிங்கின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பு மேலும் முன்னேற்றம் அடைவதுடன், வேகமான வளர்ச்சியை எட்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்’ என்று உறுதியளித்தார்.

சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 9வது பிரிக்ஸ் மாநாட்டுக்கு வாழ்த்துகளை தெரிவித்த மோடி, பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதிலும், உலக பொருளாதாரத்திலும் பிரிக்ஸ் நாடுகள் தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மேற்கு ஆசியா, கொரிய தீபகற்பம் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் அரசியல் சூழல் குறித்து இந்தியாவின் கவலையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் பேசிய சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பு கண்டுள்ள வளர்ச்சிக்காக பிரதமர் மோடியை பாராட்டினார். மேலும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்திக்க ஆவலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஹம்பர்க் நகரில் இரு தலைவர்களும் சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை என இருநாடுகளும் அறிவித்து இருந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்ததுடன், இரு தலைவர்களும் ஒருவரையொருவர் பாராட்டி இருப்பதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

இந்த நிகழ்வுகளுக்குப்பின் ஜி 20 மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer