Monday, July 24, 2017

மியூசிக் டைரக்டர் ‘ஹிப் ஹாப்’ ஆதியும், டிப் டாப் ஹீரோவாகிவிட்டார்.

“பாட்டை போட்டமா, துட்டை சேர்த்தமான்னு இல்லாமல், உமக்கு ஏன்யா இந்த வெட்டிப் பொழப்பு?” என்று கேட்க நினைத்து நாக்கை துருத்திக் கொண்டு உள்ளே போகும் அத்தனை பேருக்கும் உச்சி மண்டையில் தேன் ஊற்றி அனுப்புகிறார் ஆதி. தித்திப்பான திரைக்கதை, திணற திணற சிரிப்பு என்ற இந்த மதுரைக்காரனின் மேஜிக்குக்கு, தியேட்டரே சரண்டர்!

சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள், பல வருஷங்களுக்குப் பின் ஒரே கல்லூரியில் சந்திக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் தன் சிறு வயது தோழியை சந்திக்கும் ஆதி, அவள் மீது காதலாகி கசிந்துருக... உடன் படிக்கும் நண்பர்களின் உதவியுடன் காதல் செடி கன்னாபின்னாவென வளர்க்கிறது. ஒரு கட்டத்தில் கரெக்டாக கையில் முரட்டுக் கத்திரிக்கோலுடன் என்ட்ரி கொடுக்கிறது பெற்றோர் ஏரியா. காதலி வீட்டு சிறையில் வைக்கப்பட,

நடுவில் அந்த கல்லூரியையே தன் பாட்டால் வளைத்துப் போடும் ஆதி, பியூச்சரும் பாட்டுதான் என்று நம்பிக்கை வைக்கிறார். சென்னைக்கு வந்திறங்கும் ஆதி இங்கு வாய்ப்புக்காக அலைய... அங்கே காதலி ஆத்மிகா இவனுக்காக காத்திருந்தாளா? இல்லை வேறொருவனுக்கு கழுத்தை நீட்டினாளா? ...க்ளைமாக்ஸ்!

கதை அரத பழசுதான். ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் சுவாரஸ்யம் அள்ளுகிறது. என்ஜினியரிங் கல்லூரிகள் எப்படியிருக்கும்? உள்ளே நடக்கும் ஜுனியர் சீனியர் சண்டைகளின் வலி என்ன, வலு என்ன? கச்சேரி கலகலப்புகள் என்னென்ன? என்று நிமிஷத்துக்கு நிமிஷம் ஜிகினாவை அள்ளிக் கொட்டுகிறார் ஆதி. நான் ஹீரோவாக்கும்... என்கிற அலட்டல் துளியும் இல்லாமல் சீனியர்களிடம் ஏகத்திற்கும் அடி வாங்குகிறார். இந்த ஒரு காம்பரமைஸ் காட்சிக்காகவே இன்னும் பல வருஷ சந்தா கட்டலாம் ஆதிக்கு. (ஆனாலும் முன் மண்டை வழுக்கைதான் பயமுறுத்துது தம்பி)

ஆத்மிகாவை விட அவருக்கு தோழியாக வரும் பெண் அழகாக இருக்கிறார். இருந்தாலும் படத்தின் ஹீரோயின் ஆத்மிகாதான். பரிட்சை ஹால் வரைக்கும் கெடுபிடிகள் இருக்க, அக்காவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஆத்மிகா ஆதியை சந்திக்கும் காட்சி ஆஸம்!

விவேக், தன் கம்பீர மீசையை முறுக்கிக் கொண்டே மகனை படிப்பாளியாகவும் தமிழ் பற்றானாளாகவும் வளர்க்கிறார். அட்வைஸ் பண்ணிய பழகிய வாயாச்சே, அதை கஷ்டப்பட்டு அடைத்திருக்கிறார்கள். பொத்தாம் பொதுவாக அவர் கொடுக்கும் ஆங்கில அறிவு அட்வைஸ்க்கு மட்டும் அப்ளாஸ் அள்ளுகிறது. ‘தோற்றாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு’ என்கிற விவேக் சித்தாந்தம் ஆதியை தொற்றிக் கொண்டு அவரும் மீசை முறுக்குவதெல்லாம் சமயங்களில் காமெடி. சமயங்களில் சவுக்கடி!

படத்தில் வரும் யு ட்யூப் பிரபலங்கள் அத்தனை பேரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக விக்னேஷ், சாரா இருவரும் வருகிற காட்சிகளுக்கு மட்டும் தியேட்டரில் அதிரிபுதிரி ரெஸ்பான்ஸ். சினிமாவில் நீண்ட பிரயாணம் காத்திருக்கிறது நண்பர்களே...

ஒரு காட்சியில் வந்தாலும், இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் மா.கா.பா.ஆனந்த்

ஒருதலைராகம், நினைத்தாலே இனிக்கும் பட வரிசையில், ரீலுக்கு ரீல் பாடல்கள்!  எல்லா பாடல்களுக்குள்ளும் தன் அவ்வளவு ஆற்றலையும் கொட்டியிருக்கிறார் ஆதி. தனி ஆல்பமாக கூட கேட்டு கேட்டு ரசிக்கிற அளவுக்கு அத்தனையும் தூள்!

இப்படம் கொஞ்சமே கற்பனை கலந்த ஆதியின் வாழ்க்கை வரலாறு. ஒட்டு மீசையை முறுக்கினாலே கைதட்டுகிற சினிமாவுலகத்தில், ஒரிஜனல் மீசையை முறுக்கியிருக்கிறார் ஆதி! காலம் முழுக்க கம்பீரம் கூடட்டும்...

-ஆர்.எஸ்.அந்தணன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer