Monday, July 3, 2017

“மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் அடையாள முக்கியத்துவமுடையது. அது விடுவிக்கப்பட்டமையை வரவேற்கின்றோம். ஆனால் மற்றைய நிலங்களும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின்படி, தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும். துறைமுகத்திற்கு செல்லும் பிரதான வீதியும் இன்னும் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த 54 ஏக்கர் காணிகள் இன்று திங்கட்கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்பு அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கலந்துரையாடிய பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்புப் படைத்தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அதனடிப்படையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் கலந்துரையாடலின் மூலம் யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படைத்தரப்பினரிடம் இருக்கும் நிலங்களை விடுவிப்பது தொடர்பில் எவ்வாறான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம்.

மக்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கான இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் மயிலிட்டி துறைமுகமும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்கரை வீதி மற்றும் பலாலி வீதி, டச் வீதி, இளவாலை வீதி உட்பட வீதிகளை திறப்பதாகவும் இராணுவத்தினர் உறுதியளித்துள்ளார்கள். இருப்பினும் தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் செயற்பாடுகள் துரித கதியில் நடைபெறுமென எதிர்பார்க்கின்றோம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer