Monday, July 10, 2017

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தூபமிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், லங்கா சமஜவாய கட்சி செயலாளருமான திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.

“வடக்கு- தெற்கு மக்களிடையே பிரிவினை இல்லாமால் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம். எங்கள் தேசத்தில் சகல இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். ஆனால், இங்கே பிரிவினைக்கான வேலைகள் இடம்பெறுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவேண்டும். பொருளாதார அழிவு ஏற்பட காரணம் மக்கள் மீதான போரே ஆகும். தமிழ் மக்களின் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மக்கள் ஐக்கியமாக வாழ வேண்டும்.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதாக சொன்ன அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களைக் கடந்து விட்டன. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தையும் இதுவரை முன் வைக்கவில்லை. பழைய யாப்பில் உள்ள பௌத்தத்துக்கான அந்தஸ்து இல்லாமல் போய்விடும் என பௌத்தர்கள் கவலையடைந்துள்ளனர். அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளினால், வெளிநாடுகள் எங்கள் நாட்டின் நீதி பரிபாலனம் முதல் அனைத்திலும் தலையீடு செய்கின்றன.

அந்நிய நலனுக்கு எதிராக, தமிழ், சிங்கள, முஸ்லிம் என இன வேறுபாடின்றி போராட முன் வர வேண்டும். இந்த அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை. இன்று ஒரு திட்டம். நாளை ஒருதிட்டம் என இருப்பதனால், முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய முன் வருகிறார்கள் இல்லை. பொய்யான வாக்குறுதியே காணப்படுகின்றது. ” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer