யாழ்ப்பாணம் - நவாலி தேவாலயத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்து விட்டன.
இது 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் திகதி நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான குண்டு தாக்குதலாகும்.
இந்த தாக்குதலில் தஞ்சம் கோரியிருந்த 65 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 150 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் இலங்கை விமானப் படையினர் ஷெல் தாக்குதல்களையும் குண்டு தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர்.
இதனால் மக்கள் அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறி நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.
அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது.
இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 65 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 150ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்து விட்டன.
மேலும், ஆண்டு தோறும் ஜூலை 9ம் திகதி நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் படுகொலைச் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Sunday, July 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment