Tuesday, July 25, 2017

பிக் பாஸ், ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படை, சேவ் ஓவியா.. இவைதான் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இருந்து பெரும்பாலான வீடுகள் வரை அதிகம் பகிரப்படும் வார்த்தைகள். அந்தளவிற்கு நடிகை ஓவியாவின் தனித்துவமான பண்புநலன்கள் எல்லோரையும் கவர்ந்துவிட்டன. ஒரு நடிகையாக அறிமுகமான ஓவியாவின் நிஜ வாழ்க்கை இத்தனை தனித்துவமாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது? இதுஒருபுறம் இருக்கட்டும்.. கடந்த ஜூலை 12-ஆம் தேதி வளர்மதி எனும் மாணவி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என துண்டுபிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் ஜூலை 17-ஆம் தேதி தேச பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர் சட்டத்தில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டார். ஓவியாவின் புரட்சிப் படையினரே, வளர்மதியை தெரியுமா உங்களுக்கு?

வளர்மதிக்கு என்ன ஆச்சு?

‘நெடுவாசலில் மண்ணை மலடாக்கும் திட்டமான ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்!’ என்ற கோரிக்கையுடன், ஜூலை 15-ஆம் தேதி புதுக்கோட்டையில் 100 கிராம விவசாயிகள் இளைஞர்கள் சேர்ந்து நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வாங்க..  இளைஞர்களே.. மாணவர்களே..  என்று சேலத்தில் கூவி கூவி துண்டறிக்கை கொடுத்தார் வளர்மதி. அவர் செய்த குற்றம் அதுதான். அதற்காகத் தான் அந்த மாணவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் தேச பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

துண்டு பிரசுரத்துக்கு குண்டர் சட்டமா?

கொஞ்சம் பின்னோக்கி சென்றால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து சக மாணவர்களுடன் நெடுவாசலுக்கு ஆதரவாக போராட்டக்களம் நோக்கி ரயிலில் புறப்பட்டார் வளர்மதி. கையோடு நெடுவாசலை மீட்போம்.. இயற்கையை காப்போம்.. என்ற பதாகையுடன் தப்படித்துக் கொண்டே விழிப்பணர்வாகவும் பேசினார். திருச்சிக்கு அருகில் உள்ள குளித்தலை ரயில்நிறுத்தம் வந்தபோது அந்த மாணவியையும், அவருடன் வந்த தோழர்களையும் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்து நிர்வாண சீண்டல்களில் ஈடுபட்டது சிறைக்காவல் பிரிவு. பல நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளியே வந்தார் வளர்மதி.

நெடுவாசலில் வளர்மதி..

இந்நிலையில் தான் கடந்த ஜூன் 19-ஆம் தேதி பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி, தன் தோழர் மதுரை மணிவேலுடன் நெடுவாசல் சென்றார். போராட்டத்தில் கலந்துகொண்ட அவர்களை உளவுபார்த்த போலிசார், உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அன்று பொழுது கழிந்தது. அடுத்த நாள் 20-ஆம் தேதி காலை நெடுவாசல் மக்கள் போராட்டக்களத்திற்கு வரும் முன்பே, வேனில் காவலர்கூட்டம் வந்து குவிந்தது. சந்து சந்தாக தேடினார்கள் வளர்மதி எந்த வீட்டில் இருக்கிறார் என்று. ஆனால், அதற்கு முன்பே மாணவி வளர்மதி தோழர் மணிவேலுடன் அங்கிருந்து வெளியூர் சென்றுவிட்டார். பின்புதான் வளர்மதி சேலத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

சரி மக்களோடு மக்களாக போராட அழைப்புவிடுத்தது குற்றமென்று சொல்லி, குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் அளவிற்கு வளர்மதி என்ன செய்துவிட்டார்? ஏன் அவரை சந்துசந்தாக தேடி, சந்தர்ப்பம் பார்த்து கைதுசெய்யவேண்டும்? காரணமில்லாமலா இந்த மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப் படுவார்கள்..

எச்.ராஜா வருகையும், எதிர்ப்பும்..!

மார்ச் 5-ஆம் தேதி பா.ஜ.க தேசியச்செயலாளர் எச்.ராஜா மாலை 3 மணிக்கு நெடுவாசல் போராட்டக் களத்திற்கு வருகிறார் என்ற தகவல் பரவியதும் பரபரப்பு பற்றிக்கொண்டது. அப்போது போராட்டக்குழு ‘இளைஞர்கள், கிராமத்தினர் யார் வந்தாலும் அமைதியாக கிராம வழக்கப்படி வரவேற்போம், அவர்களிடம் நம் கோரிக்கைகளை முன்வைப்போம், யாரும் அவமரியாதையாக நடந்துகொள்ளக்கூடாது’ என்று ஒலிபெருக்கியில் பலமுறை அறிவித்தது.

இந்த நேரத்தில் 3 மாணவிகள் திடலுக்குப் பின்னால் நின்றுகொண்டு போராட்டக்களத்திற்கு வந்தவர்களிடம், ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி தெரியுமா? அதனால் என்ன பாதிப்பு? ஏன் எதிர்க்கிறீர்கள்? காய்கறி கழிவுகளில் இருந்தே இந்த இயற்கை எரிவாயுவை எடுக்கலாம் தெரியுமா? என்பது போன்ற 29 கேள்விகளையும் ஆங்கிலத்தில் வைத்துக்கொண்டு கருத்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

போராட்டத்தை நிறுத்திவைப்பதா?

மாலை சூரியன் மறையும் வேளையில் எச்.ராஜா போராட்டத்திடலுக்கு வந்தார். அப்போது பேசிய அவர், போராட்டத்தைத் தற்காலிமாக நிறுத்திவைத்துக் கொள்ளலாம் என சொன்னபோது, கூட்டத்தில் கூச்சல் ஏற்பட்டது. பந்தலுக்கு வெளியே எச்.ராஜா வெளியே செல்லும் வழி அருகே எச்.ராஜா வெளியே போ.. தமிழர்களை தீவிரவாதி என்று சொல்லும் எச்.ராஜாவை வெளியேற்று என்று கோஷமிட்டபடி 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டுவந்து முழக்கமிட்டனர். கருத்துக்கணிப்பு நடத்திய அந்த 3 பெண்கள் மற்றும் சென்னையில் இந்து ராம் நடத்திய விழாவில் செருப்பு வீசிய ஆவணத்தான்கோட்டை பிரபாகரன் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.

விரட்டியடிக்கப்பட்ட எச்.ராஜா!

கிராமத்தினர் போராட்டத்தில் குழப்பம் வேண்டாம் என்று முழக்கமிட்டவர்களிடம் கும்பிட்டார்கள். தமிழர்களின் விரோதி எச்.ராஜா வெளியே போகணும் என்று சொல்லிக்கொண்டே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் முழக்கமிட்டவர்கள். அதில் உரக்க குரல் உயர்த்தி எச்.ராஜா-வை பின் வாசல் வழியாக ஓட வைத்தது இந்த வளர்மதி தான். ரயிலில் பிடித்திருந்த அதே பதாகை எச்.ராஜா-வை விரட்டிய போராட்டதின் போதும் கையில் வைத்திருந்தார்கள். பிரச்சனை பெரிதாக இருந்ததால் எச்.ராஜா மாற்றுவழியில் வெளியேறினார். அவர் அப்படி வெளியேற்றப்பட்டதில் இருந்து, நெடுவாசலில் தீவிரவாதிகளால் போராட்டம் நடத்தப்படுவதாக சொல்லி தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.  இறுதியில் வளர்மதியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைக்குள் அனுப்பப்பட்டதற்கு இதுவும் முக்கிய காரணம்.

கடந்த சில மாதங்களாக மக்களின் உணர்வுகளை, உடைமைகளைக் காயப்படுத்தும் எந்தவித விஷயத்தையும் எதிர்த்து பொதுவெளியில் குரல் உயர்த்தி போராடுபவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதையெல்லாம் எதிர்த்து போராடவேண்டிய பொதுமக்களின் புரட்சி பிக் பாஸுக்காவும், ஓவியாவுக்காகவும் வீணடிக்கப்படுகிறது. யாருக்காகவும் தன்னை விட்டுக்கொடுக்காத ஓவியாவின் குணங்களுக்காக நேரம் செலவிடும் புரட்சிப்படையினர், சமூக மாற்றத்திற்காக போராடும் வளர்மதி போன்றோரை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

- இரா.பகத்சிங், ச.ப.மதிவாணன்

nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer