Friday, July 21, 2017

சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகிலுள்ளது இராஜபாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பாஸ்கர். உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை இணை இயக்குனராக பணியாற்றியவர். கடந்த மே மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இவர், சிறு வயது முதலே நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். தன்னுடைய குடும்பத்தினர் மட்டுமில்லாமல் சுற்றுப்பகுதியில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கும் நாட்டு மாடுகளின் பாலைக் கொடுத்து வருகிறார்.
   
இதற்காக இவர், தமிழகத்தின் பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களான காங்கேயம், உப்பளஞ்சேரி மாடுகள் மட்டுமில்லாமல், கால்சியம் சத்துமிகுந்த ஆந்திராவின் ஓங்கோல், புரதச் சத்துமிகுந்த குஜராத்தின் சிந்தி மற்றும் ரெட் சிந்தி, பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள சிந்து மாகாணத்தின் புகழ் பெற்ற நாட்டுமாட்டினமான ரத்தி, மேற்கு வங்கத்திலுள்ள கிர், பஞ்சாபில் இருக்கும் லாவா, குஜராத்தின் ஷாகிவால், ஹரியானாவின் தர்பார்க்கர் என பல்வேறு நாட்டு மாட்டினங்களை வளர்த்து அதிலிருந்து பால் எடுத்து இப்பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

சராசரியாக ஒரு லிட்டர் பால் ரூ.80-க்கு கொடுக்கும் இவர், ஒரு இலவச சேவையாக இரண்டு வயதுக்கு உள்ளே இருக்கும் 70-குழந்தைகளுக்கு நாள் தோறும் அரை லிட்டார் பால் என்ற அளவில் இலவசமாகவும் கொடுத்து வருகிறார். மாடு படுத்திருக்கும் நிலையில், பார்க்க சிவன் கோயிலில் இருக்கும் நந்தி போலவே தோற்றம் கொண்ட ஓங்கோல் மாடுகளும், சிங்கங்கள் வசிக்கும் வங்கத்தில் உள்ள கிர் காடுகளில் வாழும் கிர் என்ற ஒருவகை மாட்டினமும் இவரிடம் உள்ளது. இந்த கிர் மாடுகள் சிங்கத்தையும் முட்டி தன் கொம்புகளால் தூக்கி வீசும் ஆற்றலும், துணிவும் பெற்றவை. அங்குள்ள காட்டு மாடுகளின் இனக்கலப்பு மூலம் உருவான இந்த மாடுகளை சிங்கம் கூட அடிக்க முடியாது என்பது ஆச்சரியமான செய்தி. இந்த மாடுகளின் பால் எலும்பு ஊக்கமும், இறுகிய உடலமைப்பையும், சிங்கத்தின் உடல் பலத்தையும் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

காங்கேயம் மாடுகளில் மிகச்சிறப்புடையதாக கருதப்படும், காராம்பசு ஒன்றும் இவரிடம் உள்ளது. எட்டு வயதுடைய அந்த பசுவின் உடலில் கண்ணின் வெளி விழிப்படலம் தவிர மற்ற அனைத்து பகுதியுமே கரிய நிறத்தில் உள்ளது. இதுவரை ஐந்து கன்றுகளை ஈன்றுள்ள இந்த பசுவின் கன்றுகள் ஒன்று கூட காராம்பசுவாக வரவில்லை என்பது வியப்பான செய்தி. இலட்சத்தில் ஒன்றுதான் கரிய நிறம் கொண்ட காராம்பசுவாக வரும் என்கிறார்கள் நாட்டு மாடுகளைப் பற்றிய விபரம் தெரிந்தவர்கள். கரிய நிறம் எதையுமே எளிதில் உள்வாங்காத பண்புடையது. அதனால் தான் காராம்பசுவின் பால் சத்து மிகுந்தது. எந்த விதமான நோய்த்தாக்குதலையும் இந்த பசுவின் பாலை குடிப்பவரின் உடலுக்குள் விடாது. 22-வகையான மருத்துவபயன்களைக் கொண்டது காராம்பசுவின் பால். இந்த பசு மாடு இருக்கும் இடத்தில் எந்தவிதமான கெட்ட செய்கைகளும் நடக்காது என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கோயில் குடமுழுக்கு நடத்தும்போது காராம்பசுவை முதலில் ஆலயத்துக்குள் அழைத்து செல்வது இன்றளவும் நடைமுறையில் உள்ள வழக்கம். சிலர் புது வீடு கட்டி பால் காய்ச்சும் போதும் காராம்பசுவை வீட்டுக்குள் அழைத்து கொண்டுபோவது வழக்கம்.

இந்த மாட்டின் பால் மற்ற மாட்டு பாலைவிடவும் கூடுதல் சத்துடையது, குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு இந்த மாட்டின் பாலை இரண்டு நாட்கள் தொடர்ந்து குடித்தால், மூன்றாம் நாளே அவர்களின் அன்றாட நடவடிக்கையில் சுறுசுறுப்பும், உற்சாகமும் கூடியுள்ள உடல்  மாற்றத்தை நாம் பார்க்க முடியும்.

இந்த மாடு வளர்ப்பு பற்றி பாஸ்கரிடம் பேசினோம். “என்னுடைய தாயாரின் சொந்த ஊர் தாரமங்கலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டி. குழந்தை பேருக்காக சின்னப்பம்பட்டிக்கு சென்ற என்னுடைய தாயாருக்கு, நான் பிறந்து, நான் ஒரு வயது குழந்தையாக இருந்த நிலையில் என்னுடைய தந்தை வீட்டுக்கு என்னையும், தாயாரையும் அனுப்பிவைக்கும்போதே ஒரு பசு மாட்டையும் எங்களுடன் சேர்த்துதான் இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டு சென்றுள்ளார் என்னுடைய தாத்தா.

அப்போதிலிருந்தே நான் நாட்டு மாட்டு பாலைத்தான் குடித்து வளர்ந்தேன். என்னுடைய முதல் மகன் தேவா, இளைய மகன் தாமு இருவருமே நாட்டு மாட்டு பாலைத்தான் குடித்து வளர்ந்தனர். என்னுடைய மனைவி கல்யாணியும் கூட நாட்டு மாட்டுப்பால் குடித்து வளர்ந்தவர்தான். இதுவரை எங்கள் குடும்பத்தில் யாருமே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதில்லை. குறிப்பாக எனக்கு இதுவரை காய்ச்சல் தலைவலி கூட வந்ததில்லை. இயற்கை சூழ்நிலையில் ஏதாவது வந்தாலும், ஒரு நாளில் என்னுடைய உடலிலுள்ள எதிர்ப்பு சக்தியின் பயனாக அது தானாகவே சரியாகிவிடும். நான் எதற்காகவும் இதுவரை மருத்துவரிடம் போனதில்லை.

ஆரம்ப காலத்தில், தமிழர்களின் வீடுகளில் கட்டாயம் பசுமாடு ஒன்று இருந்துள்ளது. திருமணம் முடித்து செல்லும் பெண்ணுக்கு, தந்தை பசுவைத்தான் சீதனமாக கொடுத்துள்ளார். கணவன் வீட்டுக்குச் சென்ற தன்னுடைய மகள் உழவர் திருநாளன்று புதுப் பொங்கலிட்டு, பசுவை வணங்குவதற்கு புதிதாக ஒரு கிடாரி கன்றுக்குட்டியை வாங்கி கொண்டுபோய் மகள் வீட்டில் சீதனமாக கொடுக்கும் வழக்கம் இன்றும் கொங்குநாட்டில் உள்ள உழவர் குடியில் பிறந்த மக்களிடம் வழக்கத்தில் உள்ளது.

கருவுற்ற பெண் குழந்தை பெற்ற பின் திரும்பவும் கணவன் வீட்டுக்கு செல்லும் போதும் கறவை மாடு கொடுக்கும் வழக்கமும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதியில் இருந்தது. காலப்போக்கில், இதற்கு பதிலாக நகை, பைக், கார் என்று சீதனம் கொடுக்கும் பொருட்கள் மாறிவிட்டது.

ஒரு மனிதனின் செல்வமே மாடுகள் தான் என்றும், ஒரு நாட்டில் கால்நடைகள் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு  அந்த நாடு செல்வமுடையது என்ற கணக்குத்தான் ஆரம்பத்தில் இருந்துள்ளது. இப்போதும், கிராமத்தில் உள்ள மக்களின் சொத்து என்பது கால்நடை செல்வங்களான ஆடு, மாடுகள் தான். இதனால் தான் அய்யன் திருவள்ளுவர் கூட மாடு என்ற சொல்லை 16-அதிகாரங்களில் பயன்படுத்தியுள்ளார்.

இதையெல்லாம் நாம் மறந்துவிட்டு நாகரிகம் என்ற பெயரில் அன்னிய பொருட்களுக்கு அடிமையானதால் தான், இப்போது நோய்மிகுந்த சமுதாயமாக மாறிக்கொண்டுள்ளோம். இந்தியாவில் உள்ள அனைத்து நாட்டுமாடு இனங்களுமே வியர்வை சுரப்பிகளைக் கொண்டவை. இந்த மாடுகளின் உடலில் சுரக்கும் நீரில், அறுபது முதல் எழுபது விழுக்காடு வரை வியர்வையாகவே வெளியேறிவிடும். மீதமுள்ள 30% நீர் தான் நமக்கு பாலாக கிடைக்கிறது. இதை அறிவியல் கணக்கில் A-1 வகை பால் என்று சொல்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் இப்போது கொண்டுவந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கலப்பின பசுக்கள் எல்லாமே A-2 வகை பாலைத் தருபவைதான். இந்த மாடுகளுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது. இந்த மாட்டின் உடலில் இருந்து வியர்வை உள்ளிட்ட எந்த வகையான நீருமே தோல் வழியாக வெளியே செல்லாது. சிறுநீரும், பாலுமாகத்தான் வெளியே வரும். பத்து லிட்டர் பால் கறக்கும் ஒரு மாட்டின் பாலில் பாதிக்குப்பாதி அந்த மாட்டின் கழிவுநீர்தான் பால் என்ற பெயரில் வெளியே வருகிறது. இது எப்படி மனிதனுக்கு சத்துள்ளதாக இருக்கும்?

ஜெர்சி மற்றும் கலப்பின மாட்டின் உடலில் இருந்து வரும் இந்த திரவம்தான் நம்முடைய குழந்தைகளை நோயாளியாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில், தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இளைய தலைமுறைக்கு ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  இதனால், தற்போது மாடு வளர்ப்பு மேம்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்களும்கூட எளிமையான முறையில் மாடு வளர்க்க முடியும். அந்த மாட்டுக்கான தீவனங்களை அவர்களின் வீடுகளில் இருந்து கிடைக்கும் காய்கறி, கீரை கழிவுகள், அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை கழுவும்போது கிடைக்கும் நீர் மற்றும் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் அசோலா போன்ற நுண்ணுயிர் தாவரம் மூலம் பூர்த்தி செய்யலாம். தினமும் ஐந்து கிலோ தீவனம் மட்டுமே கொடுத்து வளர்க்கக்கூடிய நல்ல நாட்டு மாட்டினம் தமிழகத்தில் உள்ளது. வீட்டின் மொட்டைமாடியிலேயே தீவனம் உற்பத்தி செய்யலாம். மாடுகளைக் கட்டி வைக்க கீழே 10-க்கு நான்கு அடி அகலம் உள்ள இடம் இருந்தால் போதும்.

கலப்பின பசுவின் சாணம் போல நாட்டுப்பசுவின் சாணத்தில் நாற்றம் இருக்காது. நாட்டு மாடுகளின் சாணம் சிறந்த கிருமிநாசினி. இதிலிருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்யலாம். நாட்டு மாடு வளர்க்க விரும்புகின்றவர்களுக்கு நான் இலவசமாக அனைத்து வழிகாட்டுதால் மற்றும் உதவிகளையும் கொடுத்து வருகிறேன்.

என்னுடைய கோசாலையில் உள்ள 52-மாடுகளும் இரண்டு நாள் என்னை பார்க்காவிட்டால், சாப்பிட்டாது. அந்த அளவுக்கு என்னோடு பாசமாக இருக்கும். சில நேரங்களில் நான் வெளியூருக்கு சென்றுவிட்டால், ஒவ்வொரு மாட்டிடமும் நான் செல்போனில் பேசுவதை, போட்டுக் காட்டினால் தான் மீண்டும் சாப்பிடும்” என்று புன்னகைத்தபடி பேசிமுடித்தார்.

நாட்டு மாடுகள் நம்முடைய குழந்தைகளின் உடல்நலத்தை மட்டும் காப்பதில்லை. அவர்களின் உள்ளத்தையும், மனதையும் தூய்மையாக்கும்; அன்பையும், நேசத்தையும் வளர்க்கும். பசு மாடு என்பது வெறும் விலங்கல்ல, அது நம் இரண்டாம் தாய். தாயை போற்றுவோம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer