Saturday, July 8, 2017

காலை 8 மணிக்கெல்லாம் ராயப்பேட்டை ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகில், தன் கணவனை ஆத்திரத்தில் திட்டிக்கொண்டிருந்தார் அந்த துப்புரவுப் பணியாளர். குப்பையை கிண்டி எடுப்பதற்கும் வண்டியில் வைத்து அமுக்குவதற்கும் பயன்படுத்தும் கம்பு அவர் கையில் இருந்தது. பதிலுக்கு கணவனும் ஆபாச வார்த்தைகளால் மனைவியை அர்ச்சித்துக் கொண்டிருந்தார். கணவனின் குடிப்பழக்கம்தான் சண்டைக்கு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தக் கம்பால் கணவனை அடிக்க முயன்றார் அந்தப் பெண். அவன் ஆண் மகனாயிற்றே. குடி போதையிலும் கம்பை லாவகமாகத் தடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.

இருவர் வாயிலிருந்தும்  காது கூசும் அளவுக்கு தடித்த வார்த்தைகள் வெடித்து விழுந்தன. சாலையில் செல்வோர் வேடிக்கை பார்த்தபடி கடந்து சென்றார்கள். சிலர் முகம் சுளித்தார்கள். அப்போது டூ வீலரில் அந்த வழியே வந்தார் ஒரு பெண் காக்கி. மனைவி அவரைக் கூவி அழைத்தார் “யம்மா.. நீயே வந்து நியாயத்த கேளு..” என்று தன் கணவனைக் கை காட்டினார். மனைவியின் கையிலிருந்த கம்பை தான் வாங்கிக்கொண்டு குடிகாரக் கணவனை எச்சரித்தார் அந்தப் பெண் காக்கி. கணவனோ “ஏம்மா நீ வேற வந்து கூவிக்கிட்டிருக்க.. நடந்தது என்னன்னு உனக்குத் தெரியுமா? எதுவும் தெரியாம பொம்பளைக்கு பொம்பள சப்போர்ட் பண்ணுறியா?” என்று குரலை உயர்த்தினார் கணவன். பெண் காக்கிக்கு வந்ததே கோபம். “வாடா ஸ்டேஷனுக்கு.. இங்க வச்சுப் பேசினா இப்படித்தான்டா பேசுவ.. என்று கம்பால் ரெண்டு தட்டு தட்டினார். கணவன் பேச்சை விடவில்லை. “ஏம்மா அடிக்கிற.. அவ எப்படிப்பட்டவன்னு உனக்குத் தெரியுமா? அவளாலதான் நான் குடிக்கிறேன்..” என்று அழத் தொடங்கினார்.

“அவ எப்படி இருந்தா உனக்கென்ன? அவ நல்லவ இல்லைன்னு சொல்லுறல்ல.. அப்படின்னா ஒதுங்கிக்கோ.. எதுக்கு அவகிட்ட போயி வம்பு இழுக்குற?” என்று கணவனின் நிலையிலிருந்து இறங்கி வந்து பேசியது காக்கி. அப்போது கணவன் “என் பேரனைக் கூட இவ தூக்க விட மாட்டா.. இதையெல்லாம் யாருகிட்ட போயி சொல்லுவேன்.. பொம்பள சொன்னா எடுபடுது.. ஆம்பள சொன்னா யாரும் கேட்கிறது இல்ல..” என்று ஒப்பாரி வைத்தார். உடனே மகளிர் காக்கி “சரி.. விடுடா.. மொதல்ல இந்த இடத்த காலி பண்ணு.. நீ குடிக்கிறதுனாலதான்டா இவ்ளோ பிரச்சனையும்.. உன்கிட்ட பேரனை எப்படி கொடுப்பா? பேரன் காதுல கழுத்துல கிடக்கிறத கழற்றி வித்துட்டு நீ குடிப்பன்னு அவளுக்குத் தெரியாதா?” என்று கேட்க,  “என்னம்மா நீ போலீஸா இருந்துக்கிட்டு இப்படி அல்பமா பேசுற?” என்று எகிறினான்.. உடனே, அந்தப் பெண் காக்கி “ஸ்டேஷனுக்கு வாடா..” என்று கையைப் பிடித்து இழுத்தார். குடிகாரக் கணவன் போலீஸின் கைகளைத் தட்டிவிட்டு, “அட போம்மா..” என்று வேட்டியை மடித்துக் கட்டினான்.

மகளிர் காக்கியையும் கணவன் மதிக்காதது கண்டு கொதித்த மனைவி “பாருங்கம்மா.. இவன் உங்களயே மதிக்கல.. என்னை என்ன பாடுபடுத்துவான்?” எனச் சொல்லிவிட்டு, மீண்டும் கணவனைத் திட்டினார். மகளிர் காக்கியோ பெருமூச்சுவிட்டபடி “போங்கடா.. நீங்களும் உங்க சண்டையும்..” என்று டூ வீலரை ஸ்டார்ட் பண்ணினார்.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்பச் சண்டைகளுக்கு நேரம் காலமெல்லாம் கிடையாது.  இதுபோன்ற விவஸ்தையற்ற சண்டைகளை எந்தக் கொம்பனாலும் தீர்த்து வைக்கவும் முடியாது. என்ன கொடுமை சார்!.

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer