முல்லைத்தீவு கேப்பாபுலவின் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்படவிருந்த 189 ஏக்கர் காணிகளும் மக்கள் வாழ்வதற்கு பொருத்தமில்லாத காட்டுப் பிரதேசம் என்று மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, காணி கையளிக்கும் நிகழ்வு கைவிடப்பட்டது.
ஏற்கனவே திட்டமிட்டபடி கேப்பாபுலவில் நேற்று பிற்பகல் 189 ஏக்கர் காணி பொதுமக்களுக்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் காணியை ஒப்படைப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று முல்லைத்தீவு கேப்பாபுலவு சென்றிருந்தார்.
இந்நிலையில் விடுவிக்கப்படவுள்ள காணி பொதுமக்களின் காணி அல்ல, காட்டுப்பிரதேசம் என தெரியவந்ததையடுத்து அமைச்சர், "இன்று விடுவிக்கப்படவுள்ள பிரதேசம் காட்டுப் பிரதேசம் என்பது எனக்கு இப்போது தான் தெரியும்." என்றார்.
அத்துடன், கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை காணியை விடுவித்துத் தருமாறு கேப்பாபுலவில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த மக்கள், விடுவிக்கப்படவுள்ள காட்டுப் பிரதேசம் மக்கள் வாழ்வதற்கு உகந்தது அல்ல என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அமைச்சரிடம் முன்வைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதனையடுத்தே அமைச்சர், திட்டமிட்டப்படி நேற்று முன்னெடுக்கப்படவிருந்த காணி விடுவிப்பை இரத்துச் செய்தார்.
இதனையடுத்து இராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய அமைச்சர், விடுவிக்கப்படவுள்ள காணி காடு என எனக்கு இப்போதே தெரியும். இது மக்கள் வாழ்வதற்கு பொருத்தமான பிரதேசம் இல்லை. அதனால் இன்று இந்த காணி அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட மாட்டாது என்றும் இது தொடர்பில் படைத்தரப்பினருடன் விரிவாக ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர் சுவாமிநாதன், இப்பிரச்சினைக்கு படைத்தரப்பினருடன் பேசி இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக மக்கள் பிரதிநிதிகள் ஆறு பேரை எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு வருமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதால், சிறிது சிறிதாக காணிகள் விடுவிப்பதை தாங்கள் எதிர்ப்பதாகவும் கேப்பாபுலவு மக்கள் நேற்று அமைச்சரிடம் கூறி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அனைத்து காணியையும் விடுவிப்பது தொடர்பில் படை தரப்பினருடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளதனாலும், தற்போது கேப்பாபுலவு காணியில் அமைக்கப்பட்டிருக்கும் படை முகாம்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு அவசியமான நிதியை படையினருக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் விரிவாக பேச்சு நடத்துவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி அமைச்சர் கேப்பாபுலவு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் படைத்தரப்பினருடன் கொழும்பில் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். இச்சந்திப்பில் கலந்துகொள்ளும் முகமாகவே கேப்பாபுலவு மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர் கொழும்பு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
கேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த அரசு; மக்களின் எதிர்ப்பை அடுத்து திட்டம் கைவிடப்பட்டது!
Thursday, July 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment