Sunday, July 2, 2017

இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பிரபல எரிமலைப் பகுதி ஒன்றில் சனிக்கிழமை திடீரென அந்த எரிமலை சீற்றம் அடைந்ததில் 10 பொது மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். டியெங் பீட பூமியிலுள்ள சிலெரி என்ற எரிமலை வாய்ப் பகுதியே சீற்றம் அடைந்துள்ளது. இதன் போது சகதியும் கரும் சாம்பல் புகையும் 50 மீட்டர் உயரம் வரை எழுந்ததாகவும் கூறப்படுகின்றது.

காலை 11:30 மணிக்கு இந்த சீற்றம் நிகழ்ந்த போது குறித்த வாய்ப் பகுதியைச் சுற்றி 17 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும் தற்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. காயம் அடைந்த 10 பேருக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது. மீட்புப் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினரும் போலிசாரும் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக குறித்த எரிமலைப் பகுதிக்கு அண்மையில் இருந்த நூற்றுக் கணக்கான குடிமக்கள் வெளியேறி உள்ளனர்.

டியெங் பீடபூமியிலுள்ள 10 எரிமலைகளிலும் மிக அதிக இயங்குநிலை கொண்ட ஆபத்தான எரிமலையான சிலெரி 2009 இல் வெடித்துச் சிதறிய போது 200 மீட்டர் உயரத்துக்கு கரும் சாம்பல் எழுந்ததுடன் புதிதாக 3 எரிமலை வாய்களும் தோன்றியிருந்தன. மத்திய ஜாவாவின் பஞ்ஜர்னெகரா மாவட்டத்தில் உள்ள டியெங் பீடபூமிக்கு அண்மையில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து ஆலயங்கள் அமைந்துள்ளதாலும் குளிர் காலநிலை நிலவுவதாலும் அது மிகப் பிரசித்தமான சுற்றுலாத் தலமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer