Tuesday, June 6, 2017

சனிக்கிழமை இரவு 11 மணிக்கு இலண்டன் பிரிட்ஜில் வெள்ளை நிற வேனில் வந்து பாதசாரிகளைத் தாக்கியதுடன் அருகில் இருந்த பரோ சந்தையில் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்திய 3 ISIS தீவிரவாதிகளும் போலிசாரால் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தனர்.

உலகத் தலைவர்களின் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி வரும் இந்த சமீபத்திய தீவிரவாதத் தாக்குதல் இலண்டனில் நடைபெறவுள்ள தேர்தலையோ தேர்தல் பிரச்சாரங்களையோ பாதிக்காது என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

மேலும் நிராயுதபாணியான அப்பாவிப் பொது மக்கள் மீது தீவிரவாதிகள் தொடுத்து வந்த தாக்குதல்கள் போதும் என்றும் இதற்கு ஒரு  முற்றுப் புள்ளி வைக்கும் தருணம் இது என்றும் தெரேசே மே குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனில் கடந்த 3 மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3 தீவிரவாதத் தாக்குதல்கள் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அங்கு பல அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரச்சாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தன.  ஆயினும் இன்று திங்கள் முதல் முழுநேர தேர்தல் பிரச்சாரங்கள் மீண்டும் தொடங்கவுள்ளதுடன்  திட்டமிட்டபடி வியாழக்கிழமை தேர்தல் நடைபெறும் எனவும் பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு 3  இடங்களில் ISIS தீவிரவாதிகள் தொடுத்திருந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப் பட்டும் 48 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை 12 பேரை இலண்டன் போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் இலண்டனில் பொது மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மிகவும் பலப் படுத்தப் பட்டுள்ளதுடன் பல இடங்களில் நூற்றுக் கணக்கில் போலிசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer