Wednesday, June 14, 2017

இறைச்சிக்காக மாடுவிற்பது குறித்த வரைமுறைகள் குறித்த சர்ச்சை ஓய்வதற்குள்ளே, அடுத்த பிரச்சினை வந்திருக்கிறது. நாய் வளர்ப்பு, விற்பனை குறித்த விதிமுறைகளில் கெடுபிடியை அதிகரித்திருக்கிறது விலங்குகள் நல வாரியம். கிட்டத்தட்ட இறைச்சிக்காக மாடுகள் விற்பது குறித்த வரைமுறைகள் ஒழுங்குபடுத்தும்போதே இந்த விதிமுறைகளும் தயாராகிவிட்டன. நம் கவனத்துக்கு வரத்தான் தாமதமாகியிருக்கிறது.

மாநில விலங்குகள் நல வாரியம், நாய் வளர்ப்போர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிகளின்படி, இனி நாயை பெட் ஷாப்பில் வாங்கமுடியாது. நாய் வளர்ப்பதற்கான அனுமதியுடைய, பதிவுபெற்ற நபரிடம் மட்டுமே வாங்கமுடியும்.

மேலும் இத்தகைய நாய்களின் கழுத்தில் கட்டாயமாக மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கவேண்டும். இந்த சிப்பில் அவற்றுக்குப் போடப்பட்ட தடுப்பு ஊசிகள், நாய் உரிமையாளரின் விவரம், நாய் வகை, வயது மற்றும் இதர தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? ஏதோ காரணத்தால் நாயின் உரிமையாளர் நாயை அடித்துத் துரத்திவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். தெருவில் திரியும் நாயின் கழுத்திலிருக்கும் மைக்ரோசிப் மூலம் நாயின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கத்தான்.

எட்டு வாரத்துக்கு குறைவான நாய்க்குட்டிகளை விறகக்கூடாது, இனப்பெருக்கத் தடை சிகிச்சை செய்யாமல் ஆறு மாத்துக்குக் கூடுதலான வயதுள்ள நாயை, மற்றொரு உரிமம் பெற்ற நாய் விற்பனையாளரைத் தவிர மற்றவர்களுக்கு வழங்க்க்கூடாது என விதிகள் நீண்டபடி செல்கின்றன.

நாயை வாங்குபவருக்கு மட்டுமில்லாமல், விற்பனை செய்பவருக்கும் கட்டுப்பாடுகள் இருக்கிறது. நாயை வித்தோமா காசு பார்த்தோமா என்று அவர் இருந்துவிடமுடியாது. விற்ற நாய்களின் நிலை என்ன என குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒருமுறையாவது சோதிக்கவேண்டும். விற்ற நாய்களின் எண்ணிக்கை, மற்றொரு நாய் விற்பனையாளரிடம் மாற்றிக்கொண்ட நாய்களின் எண்ணிக்கை, கண்காட்சிக்காக வளர்க்கப்பட்டவை போன்ற விவரங்களை மாநில விலங்குகள் நலவாரியத்துக்கு அறிக்கை தரவேண்டும்.
சுருக்கமாக, இத்தகைய கட்டுப்பாடுகளால் ஜாதி நாய்களின் விலை உயரும். ஆசைக்கு வளர்க்கலாம்னு பார்த்தா... இவ்ளோ ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷனா என யோசிப்பதால் நாய் வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறையலாம்.

சரி, தெருவில் திரியும் நாய்களில் ஒன்று குட்டிபோட்டு அதை எடுத்துவளர்த்தால் அதற்கெல்லாம் இத்தகையை கட்டுப்பாடு உண்டா என்கிறீர்களா? அதைப் பற்றியெல்லாம் விலங்குகள் நல வாரியம் விலாவாரியாகச் சொல்லவில்லை. அவ்வளவு கெடுபிடியெல்லாம் இன்னும் வரவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், ப்ராண்ட் மதிப்புள்ள டாபர்மேன், லாப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, உள்ளூர் ப்ராண்டட் நாய்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, அலங்கை, கன்னி போன்றவற்றுக்குத்தான் இந்தக் கெடுபிடி.

கொஞ்சமும் சாதிய மனோபாவமில்லாமல் இஷ்டத்துக்கு கலப்புக் காதலுறவுகளை நிகழ்த்தி குட்டிகளையிடும் தெரு நாய்க்கு இந்தக் கெடுபிடிகள் தற்போது வரை இல்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer