Saturday, June 10, 2017

அண்மையில் சவுதி உட்பட 7 முக்கிய அரபு தேசங்கள் தீவிரவாதிகளுக்கு கத்தார் நிதியுதவி அளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டுடனான இராஜதந்திர தூதரக உறவை சடுதியாக முறித்துக் கொண்டதுடன் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கும் அதிரடி தடை விதித்து அந்நாட்டு விமானங்கள் தமது வான் பரப்பில் பறக்கவும் தடை விதித்து இருந்தன.

மேலும் கத்தாருடன் தரை மார்க்க, கடல் மார்க்க மற்றும் ஆகாய மார்க்கப் பயணத்துக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இது பங்குச் சந்தை உட்பட உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சவுதியின் இத்தடை உத்தரவுக்கு அரசியல் அவதானிகள் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக கத்தாருடனான உறவை முறித்துக் கொண்டது சவுதியின் நோக்கத்துக்கு வெற்றியளித்தாலும் இராஜ தந்திர ரீதியாகவும் வணிக ரீதியாகவும் அந்நாடு மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிட்டுள்ளது எனப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக கத்தார் சிறிய நாடாக இருந்தாலும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகத் திகழ்வது கூறப்படுகின்றது.

வளைகுடா நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக செயற்பட்டு வரும் தீவிரவாத குழுக்களுக்கும் மிகப் பெரும் ஷியா முஸ்லிம்களின் இராச்சியமான ஈரானுக்கும் கத்தார் தொடர்ந்து அளித்து வரும் நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்பதே வளைகுடா நாடுகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ள போதும் இதனை கத்தார் தான் செய்யாத தவறுக்காகத் தன் மீது பழி சுமத்தப் பட்டுள்ளது என்று மறுத்துரைத்துள்ளது.

சவுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில் தங்கி இருக்கும் பொருளாதாரம் போன்ற பல சிக்கல்கள் ஏற்கனவே உள்ள நிலையில் யேமெனுடன் அந்நாடு தொடுத்த போர் கூட ஒரு தவறான முடிவாகப் பார்க்கப் படும் நிலையில் கத்தாருடன் அதிரடி தூதரக உறவு துண்டிப்பு பாரதூரமான ஒரு செயலாகவே பார்க்கப் படுகின்றது.

இதேவேளை கத்தாரில் பெண்டகனின் மிகப்பெரிய வெளிநாட்டு இராணுவப் பாசறை அமைந்திருப்பதால் இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் நடுநிலையான போக்கும் ஈரானிடம் இருந்து கிடைக்கும் ஏற்றுமதிப் பொருட்களும் சவுதி அரசுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer