Thursday, June 29, 2017

உலகின் மிக சக்தி வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றான சீனா தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் முகமாக ஆசிய நாடுகளே வியந்து பார்க்கும் அதிநவீன போர்க் கப்பலை இன்று புதன்கிழமை அறிமுகப் படுத்தியுள்ளது. இப்போர்க் கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டது என்றும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏப்பிரல் மாதத்தில் தான் சீனா முழுதும் உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட தனது விமானம் தாங்கிக் கப்பலை அறிமுகப் படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாகத் தென் சீனக் கடலில் தான் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த சீனா தனது இராணுவத்தை எவ்வாறு கட்டமைக்கலாம் என ஆலோசித்து வருகின்றது. இந்நிலையில் சீனாவின் சின்ஹுவா ஊடகம் வெளியிட்ட தகவலில் சுமார் 10 000 டன் எடை கொண்ட புதிய போர்க் கப்பலில் விமானப் பாதுகாப்பு, ஏவுகணை எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்று அறிவித்துள்ள நிலையிலும் பலமுறை சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகில் தனது கடற்படைக் கப்பல்கள் மற்றும் டிரோன் விமானங்களை அமெரிக்கா அனுப்பி வைத்து சீனாவை ஆத்திரமூட்டி இருந்த நிலையிலும் சீனா அதிரடியாகத் தனது இறையாண்மையை உறுதிப் படுத்தும் நடவடிக்கையாகவே போர்க் கப்பல்களை அறிமுகப் படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இன்னொரு புறம் சீனா தனது இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த ஆண்டு 7% வீதம் அதிகரிக்கப் போவதாக மார்ச் மாதம் அறிவித்திருந்தது. ஆனால் சீனாவை விட அதிக இராணுவ பலத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவில் அதற்கான இவ்வருட நிதி ஒதுக்கீட்டை 10% வீதம் அதிகரிப்பது என்ற திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் புதிய அதிநவீன போர்க் கப்பலுக்கு 055 டெஸ்ட்ராயர் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer