Saturday, June 24, 2017

தமிழ் திரையுலகின் கதாநாயகர்களில் சிலருக்கு தான் உண்மையான, ஏற்பாடு செய்யப்படாத  ரசிகர் கூட்டம் கருதத்தக்க அளவு இருக்கும். வாரிசு நடிகர்கள் அல்லது குடும்பமாய் நடிப்பவர்களுக்கு மட்டும் தான் முதல் படத்திலேயே ரசிகர் மன்றங்கள் எல்லாம் அமையும். 'பவர் ஸ்டார்' சீனிவாசன், 'பாஸ்' பாஸ்கரன், ஜே.கே.ரித்தீஷ் போன்றவர்களுக்கு படங்கள் வராத போதும்  மன்றங்கள் வந்தன. அதற்கு அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள், செலவுப் பணத்துக்கு என்ன செய்தார்கள் என்பதெல்லாம் பின்னர் செய்திகளில் வந்தன. அது வேறு விஷயம்.  இதைத் தவிர, ஒவ்வொரு படத்தையும், நடிப்பையும், அல்லது அதைத் தாண்டிய சில நடவடிக்கைகளையும் பார்த்து சில நடிகர்களுக்கு ரசிகர்களும் மன்றங்களும் பெருகியிருக்கின்றன. இப்படி, ரசிகர்களும் மன்றங்களும் அமைவது பல விதமாக இருக்கும்.  அந்த ரசிகர்கள் தங்கள் கதாநாயகன் நடித்த படம் வரும்பொழுது கொண்டாடுவார்கள். ஆனால், ஒரு படம் முழுமையாக வெற்றியடைய அந்த ரசிகர்கள் பார்த்தால்  மட்டும் போதாது. ரஜினியே 'லிங்கா' நடித்தால் ஓடாமல் போகும் காலம் இது. அப்படியிருக்கும் காலத்தில் வெளியாகியிருக்கும்  STR நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம், STR ரசிகர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்காவது பிடிக்கும் அளவுக்கு இருக்கிறதா?

துபாயில் மிகப்பெரிய 'டான்' ஆக கலக்கிய 'மைக்கேல்' (எ) 'அஸ்வின்', சர்வதேச போலீசால் தேடப்படுகிறார். அவரது கூட்டாளி அவர்களிடம் சிக்கி  விசாரணையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சொல்லும் கதை தான் 'மதுரை மைக்கேல்'  எனும் மதுரை ரவுடி துபாயில் டானாக கலக்கிவிட்டு சென்னையில் 'அஸ்வின்  தாத்தா'வாக   கடைசி காலத்தை கழிக்கும் கதை. "சினிமாவுல தொடாம நடிக்கிற TRனு நினைச்சியாடா...உதட்டை கடிச்சு இழுக்கிற STRடா", "நான் மோசமானவன் தான், ஆனா கேவலமானவன் இல்ல, கொஞ்சம் கெட்டவன்", இதெல்லாம் இந்தப் படத்தில் வரும் 'பன்ச்' வசனங்கள். இதை வைத்தே படத்தை எடை போட்டுக்கொள்ளலாம். "பொண்ணுங்க விஷயத்துல உன்னை எல்லோரும் தப்பாவே புரிஞ்சுக்குறாங்க", "அவன் பனிமலை..எரிமலை", என்று படம் முழுவதும் சிம்புவைப் புகழ்ந்தே  வசனங்கள், காட்சிகள். இது எதுவும் படத்திற்கு சற்றும் உதவவில்லை. நாயகன் அறிமுகம் ஆகும் காட்சியில் 'பில்ட் அப்'  இசை, 'ஸ்லோ   மோஷன்' சரி. படம் முழுவதும் தேவையா?   ஸ்ரேயா, தமன்னா என இரண்டு புகழ் பெற்ற கதாநாயகிகளும் படம் எந்த தரத்திற்கு இருக்கிறதோ அதற்கு ஏற்ப பயன்பட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா', அனைவரும் பார்க்கக்கூடிய படமாக இல்லாமல், பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களைக் கொண்டு இருந்தது என்றாலும் அது குறிவைத்த ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. ஆனால், இந்தப் படம் அந்த ஒரு  விஷயத்திலும்  தோற்றிருக்கிறது. சிம்பு அழகானவர்,  நன்றாக நடிக்கக் கூடியவர், பாடுவார், பாடல் எழுதுவார். ஆனால் இந்தப் படத்தில் எதுவும் இல்லை.  காதல் என்ற பெயரில்  ஏதோ ஒன்றை  செய்து  தோற்றவர்களின் சங்கத் தலைவர் போல் தோன்றுகிறார் சிம்பு. இதில் ஜி.வி.பிரகாஷ் கௌரவ(?) தோற்றம் வேறு. சினிமா என்ற கலையின் மூலம் இந்த  விஷயத்தைத்தான் சொல்ல வேண்டும் என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால்  சொன்ன விஷயத்தில்  கருத்தொழுக்கமும் இல்லாமல், சினிமா கலைக்கான எந்த ஒழுக்கமும் இல்லாமல் இருப்பதை ஆதிக் தான் சிந்திக்கவேண்டும். இந்த படத்தின் இரண்டாம் பாதியிலேயே கதை நகர சிரமப்பட்டிருக்கிறது, இரண்டாம் பாதி எதற்கு என்று புரியவில்லை. ஆனால், முடிந்தால்  ஆதிக் அந்த பாகத்தை நன்கு மறுபரிசீலனை செய்து முடிந்த அளவு சிறப்பாக எடுத்து இந்த பெயரையும் ரசிகர்களுக்கு நடந்த துயரையும் நீக்க ஒரு வாய்ப்பு.

யுவனின் இசை மீண்டும் துடிப்புடன் வர ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் படங்கள் சரியாக அமையாமல் போகின்றன. கண்ணை மூடிக்கொண்டு யுவனின் பின்னணி இசையைக் கேட்டால், ஒரு 'மாஸ்' படம் பார்த்த உணர்வு ஏற்படும். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு ஒரு பொழுது போக்குப் படத்திற்கு ஏற்ற வகையில்  ஏரியல் கோணங்கள், வண்ணங்கள்  என நன்றாகத்தான் இருக்கிறது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்... மோசமானவன், மொக்கையானவன், மட்டமானவன்!!!

0 comments :

Post a Comment

 
Toggle Footer