Friday, June 23, 2017

தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாக விளங்கும் நடிகர் விஜய்யின் 43-வது பிறந்த நாள் இன்று. சட்டம் ஒரு இருட்டறை, ஜாதிக்கொரு நீதி போன்ற படங்களின் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக 22 ஜூன் 1974-ஆம் ஆண்டு பிறந்தார் விஜய். 1984-ஆம் ஆண்டு வெற்றி என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பல படங்களில் கதாநாயகனாக விஜய் நடித்திருந்தாலும், மக்களின் நாயகனாக அனைவரின் மனதிலும் இடம்பிடித்தது இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் தான்.

பூவே உனக்காக படம் வெளிவந்த காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் காதலின் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. கபாலி படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு பேட்டியில் “பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இளைஞர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படங்களுக்குப் பின்னர் அனைத்து இளைஞர்களும் காதலிக்க ஆரம்பித்தனர், காதலிகளுக்கு மினி என்று பெயரிட்டு அழைக்கப் பழகினார்கள். விஜய் அணிந்திருந்த பட்டி ஷர்ட் அப்போதுதான் பிரபலமாகியிருந்தது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

குஷி, கில்லி, போக்கிரி போன்ற படங்கள் விஜயை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவாக்கின. பல வெற்றிப் படங்களுக்கு இடையே சில படங்கள் தோல்வி அடைந்தன. ஆனால், எல்லா தோல்விகளையும் உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் விஜய். தன் ரசிகர்களை சந்தோசப்படுத்துவதையும் தாண்டி, தன் படங்களில் வெகுஜனங்களுக்கான கருத்துக்களை வசனங்களாகவும், பாடல்களாகவும் தொடர்ந்து பதிவுசெய்பவர் நடிகர் விஜய்.

பல  பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரராக கருதும் அளவிற்கு  தான் நடிக்கும் படங்களில் தங்கை கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவர் விஜய். அதற்க்குப் பின்னால் அவர் உடன் பிறந்த தங்கை வித்யாவும் ஒரு காரணம். வித்யா தன் இரண்டு வயதிலையே உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். மிகவும்  அமைதியாக  இருக்கும் விஜய் தன் சிறு வயதில் குறும்புக்கராகவும், மிகையான இயக்கம் உள்ளவராகவும் இருந்திருக்கிறார். தங்கை வித்யாவின் மறைவுக்குப் பின்னால் அப்படியே அமைதியாகிவிட்டார்  என்று விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது விஜய்யின் 43-வது பிறந்தநாளான இன்று,  அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல்  படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள்  வெளியாகியுள்ளன. முதலில் வெளியான போஸ்டர் விஜய் மாடுபிடி வீரராக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அந்த போஸ்டரின் பின்னால் பெரிய தமிழக அரசியல் இருப்பதாகவும் பலராலும் பேசப்படுகிறது.

விஜய் அரசியலுக்கு வரட்டும் அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும், அவர் ஒரு பச்சை தமிழன் என்று சீமான் ஒரு பேட்டியில் கூறுகிறார். தற்போது பா.ஜ.க பிரமுகரான எஸ்.வி.சேகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி, “விஜய் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நல்லவர்கள் என்னும் பட்சத்தில் அவர்களுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. மக்களின் நலன்குறித்து பேசிவரும் நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நினைக்கிறேன். அதற்கான சூழல் தற்போது இருக்கிறது . வருங்கால தமிழக முதல்வர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தன் படத்தில் மட்டுமல்லாமல், நிஜவாழ்க்கையிலும் மக்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் ஆதரவாக குரல் கொடுக்கும் விஜய் ஏன் அரசியலுக்குள் வரக்கூடாது? என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer