Tuesday, June 20, 2017

ஒரு திரைப்படத்தை நாம் பார்க்கும் பொழுது, அதை மதிப்பிடும் பொழுது, அந்தப் படத்தின் நோக்கமும் கருதப்பட வேண்டும். நகைச்சுவை படங்களில் நல்ல கருத்துகளையும், திகில் படங்களில் தர்க்க ஞாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. அதே நேரம், நோக்க வேறுபாடுகளைத் தாண்டி, திரைப்படங்கள் நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதும், தாக்கத்தை ஏற்படுத்துவதுமே அந்த படங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். அந்த வகையில், எடுக்கப்பட்ட நோக்கமான நகைச்சுவை-திரில்லர் என்பதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிடுகிறது மரகத நாணயம்.

திருப்பூரிலிருந்து கடன் கொடுத்தவர்களின் தொல்லையால், சென்னைக்கு வந்து நண்பர் டேனியுடன் சேர்ந்து, கடத்தல் தொழில் செய்து பணம் சம்பாரிக்க முயல்கிறார் ஆதி. அவர்களது குழுத்தலைவர் ராம்தாஸ். சின்ன சின்ன வேலைகள் செய்துகொண்டிருக்கும் அவர்கள், பெரிய வேலை செய்து செட்டில் ஆக முடிவு செய்கிறார்கள். அந்த நேரத்தில், தொட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லாத, மரகத நாணயத்தை எடுக்கும் வேலை இவர்கள் கைக்கு வருகிறது. மரகத நாணயத்தை இவர்கள் என்ன செய்தார்கள், மரகத நாணயம் இவர்களை என்ன செய்தது என்பதை நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ARK சரவன்.

சாதாரணமாக தொடங்கும் படம் அதன் முக்கிய தளத்துக்கு வந்ததும் சுவாரசியம் ஆகிறது. நாயகன், நாயகி இருந்தும், அவர்களுக்குள் காதல் இருந்தும், வழக்கமாக இல்லாமல், வித்தியாசமாக இருப்பது, செயற்கையாய் இருந்தாலும் ஆனந்தராஜின் குழு சிரிக்க வைப்பது, ராமதாஸ், அருண் ராஜா காமராஜ் ஆகியோரது கதாப்பாத்திரங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன. மரகத நாணயத்தைப் பற்றிய மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி படம் தொடங்க, மரகத நாணயத்தை நோக்கிய தேடலை ஆவலுடன் எதிர்பார்க்கும் நமக்கு, அந்தத் தேடலை ஒரு திகிலான பயணமாக வடிவமைக்காமல் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பது சற்று ஏமாற்றம் தான். இருந்தாலும் வெடித்து சிரிக்க வைக்கும் பல காட்சிகள் இருப்பது மகிழ்ச்சி.

ஆதி, சில ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல திரைப்படத்தில் வந்திருக்கிறார். அவரது தோற்றம் சிறப்பாக இருந்தாலும், நடிப்பு சில இடங்களில் அந்நியமாக உணரச் செய்கிறது. நிக்கி கல்ராணிக்கு உடல் மொழிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாப்பாத்திரம். சிறப்பாக நடித்திருக்கிறார். ஆதியும் நிக்கி கல்ராணியும் இந்த கதைக்கும்,  களத்துக்கு சற்று அதிகமான பொழிவுடன் இருக்கிறார்கள். ராம்தாஸ், ஆனந்த்ராஜ் இருவரும் படத்தை நகைச்சுவையாய் நகர்த்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். பிரம்மானந்தத்தின் பாத்திரம் தெலுங்கு வெளியீட்டுக்கான திணிப்பாகத் தெரிகிறது.  வசனங்களில், முடிந்த இடங்களில் கருத்துக்களையும் கூறியிருக்கிறார் சரவன்.   படம் தொடங்குவதிலும் முடிவதிலும் இருக்கும் சுணக்கத்தை சரி செய்திருந்தால் முழுமையான திருப்தியை கொடுத்திருக்கும். PV ஷங்கரின் ஒளிப்பதிவில் படத்திற்கு அழகு சேர்க்கும்  வகையில் ஒளியமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. திபு நினன் தாமசின் பின்னணி இசை, 'சதுரங்கவேட்டை'யை நினைவுபடுத்தினாலும் சிறப்பாக இருக்கிறது. மிக அழகான 'நீ கவிதைகளா'  பாடல் படத்திற்கு தடையாக இருக்குமென்பதால்  பயன்படுத்தப்படவில்லை.

பார்த்து அசர அதிகமில்லை; சிரித்து மகிழ வைக்கிறது மரகத நாணயம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer