Monday, June 5, 2017

நமது சினிமாவில் தெரிந்தே, ஆனால் மீண்டும் மீண்டும் செய்யப்படும் ஒரு விஷயம், ஒரு கதாப்பாத்திரத்தில் ஒரு கதாநாயக நடிகர் நடித்து, அது வெற்றி பெற்று விட்டால், அதே போன்ற கதையையும் கதாப்பாத்திரத்தையும் எழுதிக்கொண்டு அவரிடம் அடுத்து ஒரு பத்து இயக்குநர்களாவது  செல்வது. பல சமயங்களில் அது எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், சில படங்கள் வெற்றிபெற்று விடுவதால் அது  மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. அதீத தன்னம்பிக்கை உடைய, திட்டமிட்டு வேலைகளை முடிக்கும், தத்துவ வசனங்கள் பேசும் கதாப்பாத்திரமாக நடராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை'யின் வெற்றி, 'போங்கு'க்கு வழி வகுத்துள்ளது. மீண்டும் பார்த்தாலும், 'ரேர் பீஸ்' (rare piece) நடராஜ் பேசும்பொழுது அந்த வசனங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், வசனங்கள் அளவுக்கு படம் இருக்கிறதா  என்று பார்ப்போம்.

உயர் ரக சொகுசு கார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கும் நடராஜ், ரூஹி சிங், அர்ஜுனன் ஆகியோரது வேலை ஒரு கார் திருட்டால் பறிபோய் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. மீண்டும் அவர்கள் வேறு எங்கும் வேலைக்கு சேர முடியாமல் போக, சிறையில் பழகிய நண்பருடன் சேர்ந்து கார் திருட்டைத் தொழிலாக செய்கிறார்கள். பின்னர், அவர்களுக்குக்  கொடுக்கப்படும் பெரிய வேலையில் மதுரை முக்கியப்புள்ளி சரத்தின் பல விலை உயர்ந்த கார்களை திருட நேர்கிறது. வெற்றிகரமாக திருடினார்களா, பெரிய தாதாவான வில்லன் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை போங்காக சொல்லியிருக்கிறார் இயக்குனர் தாஜ். கதைக்கான அடிப்படையை ஆங்கிலப் படங்களில் இருந்து எடுத்தாயிற்று. அப்படியே சுவாரசியமான காட்சிகளையும் பரபரப்பான  திரைக்கதையையும் எடுத்திருந்தால்  குறையாய் இருந்திருக்காது. நடராஜுக்காகவே செய்யப்பட்ட கதாபாத்திரம் என்பதால் அவரது நடிப்பில் குறையில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் இதே போன்ற கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் அவர் முடிவெடுக்க வேண்டும். அர்ஜுனன், ரூஹி ஆகியோர் உடன் இருக்கிறார்கள். 'முண்டாசுப்பட்டி' ராமதாசும், சாம்சும் மிகுந்த ஆறுதல்கள். வில்லன் சரத்தும், போலீஸ் அதுல் குல்கர்னியும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.          

நமக்குத் தெரிந்த, தெரியாத அத்தனை உயர் ரக வெளிநாட்டுக்  கார்கள் உட்பட பல கார்களை வைத்திருக்கும், மதுரையின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான வில்லன், போலீஸ் ஒருவர் தன் கிளப்புக்குள் நுழைந்தவுடன், அவரைப் பார்த்து பம்புகிறார், "வாங்க சார், என்ன சார் விஷயம்", என்று பதறுகிறார். இன்னொரு பாடல் காட்சியில், அவர் வைத்திருக்கும் அத்தனை கார்களையும், பேருந்து நிலையம் அருகே உள்ள சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு போவதைப் போல சுலபமாக, வரிசையாக ஒரே நேரத்தில் தள்ளிக்கொண்டு, மன்னிக்கவும் திருடிக்கொண்டு செல்கிறார் கதாநாயகன், தன் குழுவுடன். இப்படிப்பட்ட  காட்சிகளை வைத்து இன்னும் படங்கள் எடுக்கவும் ஒரு தைரியம் வேண்டும். சில நகைச்சுவைகளாலும், பெரிதாய் தேங்கி நிற்காமல் போகும் திரைக்கதையினாலும் படம் சற்று காப்பாற்றப்பட்டிருக்கிறது, நாமும் தான். இன்னும் தமிழ் சினிமா ரசிகர்கள், இரண்டாம் பாதியில் சொருகப்படும் குத்துப் பாடல்களை ரசிக்கிறார்கள் என்று இயக்குனர் தாஜ் நம்பியிருக்கிறார் போல... 'ரோல்ஸ்ராய்ஸ்' போன்ற கார்களைத் திருடப்போகும் கதாநாயகன் எத்தகைய திட்டமிட வேண்டும்? அதை இன்னும் சுவாரசியமாக காட்டியிருக்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பறந்துவிடுகின்றன. பின்னணி இசையை வேறு ஒருவர் அமைத்திருக்கிறார். மிகுந்த சத்தமும், வேகமான இசையும் பரப்பரப்பைக் கூட்டாமல் தலைவலியைக் கூட்டுகின்றன. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. மொத்தத்தில் படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு போங்கு காட்டியிருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer