Tuesday, June 13, 2017

ஹவாலாவால் திவாலாகும் ஒரு கும்பலின் கதைதான் ரங்கூன்! பணம், தங்கம், தகராறு, வெட்டு, குத்து, போலீஸ்... என்று வடசென்னையின் அழுக்கு முகத்தை இன்னும் இன்னும் கருப்பாக்கி காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

ஆங்... கருப்பு என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. சிவந்த தோல் அழகன் (?) கவுதம் கார்த்திக்குக்கு கருப்பு மையை தடவி உள்ளூர் நிறத்திற்கு ஒப்பேற்றியிருக்கிறார்கள். என்ன செய்து என்ன பயன்? தக்காளி பழத்திற்கு தார் பூசிய லட்சணத்திலிருக்கிறது படம். கூடவே... கவுதமும்!

ரங்கூனிலிருந்து அகதியாக வட சென்னைக்கு வந்து சேரும் சிறுவன் கவுதம், அங்குள்ள சேட் ஒருவரிடம் வேலைக்கு சேருகிறான். அவரை கொல்ல வரும் கும்பலிடமிருந்து சேட்டை காப்பாற்றவும் செய்கிறான். அப்புறமென்ன? மிஸ்டர் பண மழையின் கனபரிமான பிசினஸ் வளையத்துக்குள் மிக முக்கியமான நபராக கவுதமும் இணைந்து கொள்கிறார். தங்கக் கட்டிகளை ரங்கூனில் சேர்த்துவிட்டு, அங்கு தரப்படும் ஆறு கோடி ரூபாயை கொண்டு வந்து சேட்டிடம் ஒப்படைக்கும் தலை போகிற வேலை தரப்படுகிறது கவுதமுக்கு. நண்பர்கள் சகிதம் ரங்கூனுக்கு கிளம்பும் ஹீரோ கவுதம், சொன்ன வேலையை முடித்தாரா? துரோகத்தை வென்றாரா? யார் துரோகி? யார் நல்லவன்? இதெல்லாம் விறுவிறுப்பாக (வந்திருக்க வேண்டிய) செகன்ட் ஹாஃப்!

பொதுவாகவே தமிழ்சினிமாவில் வடசென்னை பாஷை படங்கள் வெற்றி பெற்றதேயில்லை. ஏனோ... அந்த லாங்குவேஜ் மீது தென் சென்னை காரனுக்கே கூட வெறுப்பு வரும். இதை மொத்த தமிழுலகமும் ரசிக்கும் என்று நம்பிய இயக்குனரின் நம்பிக்கை அம்மன் கோவில் சூலத்தில் அமுக்கப்பட்ட எலுமிச்சம் பழமாகியிருக்கிறது.  ஐயகோ...

கவுதம் கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் சேட்டுக்கடையில் வெகு காலம் மூடி வைக்கப்பட்ட அடகு நகை போலவே பாலீஷ் போன ஹீரோவாகிவிட்டாரா? நமக்குதான் அவர் வருகிற காட்சிகளில் எல்லாம் எரிச்சல் வருகிறது. அட... ஹீரோயினாவது மூக்கும் முழியுமாக இருக்கிறாரா என்றால், அந்த சந்தோஷத்திலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்கள். படம் துவங்கியதிலிருந்தே சைக்கிளில் லாரியை கட்டி இழுப்பது போல, மொத்த படமும் திக்கி திணறி அமுக்கமாக நகர்கிறது. ஆனால் சென்னை டூ ரங்கூன் சாகச பயணம் மட்டும் விறுவிறுப்பு. உருப்படியாக போய் சேர்ந்துவிடுவார்களா என்கிற பதற்றத்தை தருகிற காட்சிகள் ஒவ்வொன்றும்.

கூடவே இருந்த நண்பன் ஏன் வில்லனாக வேண்டும்? தனக்காக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஹீரோவை ஏன் சேட்டு மாட்ட விட வேண்டும்? படத்தில் ஒரு ஷாக்கிங் திருப்பம் வேண்டும் என்பதற்காக லாஜிக்கை உடைத்து வெங்காயம் இல்லாத ஆம்லெட் போட்ட குற்றத்துக்காக டைரக்டரை என்ன செய்யலாம்?

விஷால் சந்திரசேகர் என்ற இசையமைப்பாளருக்கு எப்படி தொடர்ந்து படங்கள் கிடைக்கிறது? பெரிய ஆச்சர்யமே அதுதான். பாடல்கள் இவரல்ல. வெறும் பின்னணி இசைதான். படம் முழுக்க லொட்டு லொஸ்கு என்று தட்டிக் கொண்டேயிருக்கிறார். ஸ்ப்பா... முடியல. ஆர்.எச்.விக்ரம் என்பவர்தான் பாடல்களுக்கான இசை. எதுவும் ரசிக்கிற விதத்தில் இல்லை.

இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரன் படத்தில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்த டேனியலுக்கு இதில் முக்கிய ரோல். கிடைத்ததை சரியாக பயன்படுத்தியும் இருக்கிறார். மற்றபடி சேட்டுவாக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

கம்பீரமாக செலவு செய்திருக்கிறார்கள். கதை சொல்லப்பட்ட விதத்தில்தான் ‘கூன்’ விழுந்திருக்கிறது.

-ஆர்.எஸ்.அந்தணன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer