Tuesday, June 27, 2017

“ஏற்கனவே நடத்தப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி விசாரணையில் குற்றமற்றவன் என்று நான் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்த விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இன்று திங்கட்கிழமை எழுதியுள்ள பதிவொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவின் முழுமையான வடிவம்:

அனைவருக்கும் வணக்கம்.

எனது பொது வாழ்வை கேவலப்படுத்தும் வகையில் ஒரு சில விசமிகள் அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது அரசியல் எதிர்காலம் குறித்து அச்சப்படும் நண்பர்களே இதற்குக் காரணம் என நம்புகிறேன். மெளனம் சம்மதம் என்றாகி விடக்கூடாது என்பதால் இப்பதிவை இடுகின்றேன்.

குடும்ப ஆட்சி:

இக்குற்றச்சாட்டு அமைச்சர் பொறுப்பெடுத்து ஒரு சில நாட்களில் இருந்தே முன்வைக்கப்படுகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்க சிறப்புரிவை உண்டு. அதனடிப்படையில் தங்களிற்கு நம்பிக்கையான, விடயமறிந்தவர்களை நியமிப்பார்கள். இந்நியமனங்கள் தற்காலிகமானவை. மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவுறும் போது நியமனம் பெற்ற பிரத்தியேக உதவியாளர்களின் பதவி வெற்றிடமாகும். இவர்களிற்கு அரசு நியமனம் வழங்கப்படவில்லை. வழங்கவும் முடியாது.

இந்நிலையில் கெளரவ முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமக்கு நம்பிக்கையான தமது வெற்றிக்கு உழைத்த விடயமறிந்தவர்களையே நியமித்துள்ளார்கள். அவ்வாறே நானும் செய்துள்ளேன்.

என் மனைவி வைத்தியராக கடமையாற்றுவது இங்கு அனைவரும் தெரியும். அவரது திணைக்களத்தில் விரும்பியவர்கள் உறுதிப்படுத்தலாம். ஏற்கனவே அரச பதவியில் இருக்கும் எனது சகோதரன் சட்டரீதியாக தற்காலிக விடுப்பில் என்னுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனையவர்கள் எனது வெற்றிக்காக பாடுபட்டவர்கள், உறவுகள், நண்பர்கள். இவ்வாறே ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் செய்த போதும் இலவச விளம்பரம் எனக்கு மட்டும் தான்.

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதுடன், ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் குற்றமற்றவர் என தீர்ப்பு இருந்த போதும் எந்த விராரணையையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன்.

தமிழ் பேசும் மக்களது அரசியலில் படித்த விடயமறிந்தவர்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்களது விருப்பம் நிறைவேறுமாக இருந்தால் என்னை நானே நெந்து கொள்வதை விடவேறு எதுவுமில்லை. மேலைநாட்டில் மருந்துவம் படித்து தாய்மண்ணில் சேவை செய்ய 1996இல் வந்து 18 வருடங்களாக சொந்த மண்ணில் பணியாற்றி ஒய்வூதியமும் இல்லாமல் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட எனக்கு கிடைத்த பரிசு வேறு எவரும் பெறக்கூடாது. என்னை நானே நொந்து கொள்வதே இப்போதுள்ள தெரிவு.

என்னை தூற்றியோரும், வாழ்த்தியோரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer