Tuesday, June 20, 2017

பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக பீஹார் மாநில ஆளுனர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், முன்னர் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இவர் இடம்பெற்றிருக்கவில்லை.

அதோடு தென்னிந்தியாவில் பாஜக காலூன்றுவதற்கு வசதியாக தென்னிந்தியர் ஒருவரே பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் எனும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், ராம்நாத் கோவிந்த் தெரிவாகியுள்ளதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. பாரதிய ஜனதா கட்சி மீதான அவர் விசுவாசம். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். பீஹார் மாநிலத்தில் ஆளுனராக பணிபுரிகிறார்.

சமீபகாலமாக உத்தரபிரதேசத்தில் தலித்துக்களுக்கும்  ராஜபுத்திரர்களுக்கும் இடையில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் தலித்துக்களிலிருந்து ஒருவர் நாட்டின் அதியுயர் பதவிக்கு தெரிவாகியிருப்பது அவர்களை ஆறுதல் படுத்தும் எனும் நம்பிக்கை பாஜகவிடம் எழுந்துள்ளது.

அதோடு பீஹார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் அவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருப்பதால், பீஹார் மாநில ஆதரவும், பாஜக வேட்பாளருக்கு கிடைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்து வளர்ந்த ராம்நாத் கோவிந்த், கான்பூர் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகவும், உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் வழக்கறிஞராகவும் பணிபுரிந்துவந்தவர்.

இதேவேளை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிக்குமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது. அதோடு, எதிர்க்கட்சிகளின் சார்பில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரை குடியரசு தலைவராக நியமிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer