Sunday, June 4, 2017

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் இடத்தை நிரப்புவதற்கான மிகப்பெரிய பணி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காத்திருக்கிறது என்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கலைஞர் மு.கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவையில் அவரது 60வது ஆண்டு விழா ஆகியன ஒன்றாக நேற்று சனிக்கிழமை சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் பேசும் போதே ராகுல் காந்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஸ்டாலின் உள்பட திமுகவினருடன் இந்த மேடையில் வீற்றிருப்பது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்ததற்கு நன்றி. கருணாநிதி மேலும் பல பிறந்த நாட்களை காண வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன். அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஒரு அறிஞர் சொன்னார், நான் மிக அதிகமாக ஒருவரை நேசிக்கிற போது நமக்கு பலம், வலிமை கிடைக்கிறது. ஒருவரால் நாம் ஆழமாக நேசிக்கப்படும் போது துணிச்சல் கிடைக்கிறது என்று அவர் சொன்னார். அந்த வகையில் கருணாநிதி கோடானுகோடி தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்படுகிறார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பலமாகும். அவரும் மக்களை ஆழமாக நேசிக்கிறார். அவர்களை ஆழமாக நேசிக்கிறதால் கருணாநிதிக்கு மிகப்பெரிய துணிவைத் தருகிறது.

இந்த இரண்டும் இணைந்து, அதாவது வலிமையும், துணிவும் சேர்ந்து அவருக்கு ஞானமாகவும் அறிவாற்றலுமாக திகழ்கிறது. அவர் தோல்வியை அடையாமல் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் என்பதற்கு காரணம் உள்ளது. மக்கள் மீது அவர் வைத்திருந்த மிகுந்த ஆழமான நேசமும், மக்கள் அவர் மீது வைத்திருந்த நேசமும்தான் அதற்கு காரணம்.

கருணாநிதி பேசும்போது, அது அவர் குரலாக மட்டுமல்லாமல், தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோர் பேசும்போதெல்லாம் அந்தந்த மாநில மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக அமைகிறது. அதுபோலத்தான் ஸ்டாலின் பேசும்போதும் அது தமிழர்களான உங்களின் உணர்வுகளை எதிரொலிப்பதாக அமைகிறது.

கருணாநிதி தினமும் காலையில் கடிதம் எழுதும்போது, உங்கள் பிரச்சினைக்காக, உங்களின் தகவலைப் பெற்று எழுதினார். அவர் வேறு கற்பனைகளில் இருந்து கடிதம் எழுதவில்லை. உங்கள் எண்ணங்களில் இருந்தும், உங்கள் பிரச்சினைகளில் இருந்தும், நீங்கள் சொல்வதில் இருந்தும் அவர் கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடிதம் உங்கள் கருத்துகளில் இருந்து வந்தது.

70 ஆண்டுகளாக அவர் எழுதியபோதெல்லாம், இங்குள்ள தமிழனுக்காக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மக்கள் நலனுக்காக அமைந்திருந்தது. எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேடையில் இருக்கும் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், தமிழ், தமிழர், தமிழ்ப்பண்பாடு, கலாசாரமெல்லாம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறோம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer