Wednesday, June 7, 2017

ISIS உட்பட தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் பேரில் சவுதி அரசு தனது நாட்டில் செயற்பட்டு வரும் கத்தார் ஏர்வேஸின் அனைத்து அலுவலகங்களையும் 48 மணி நேரத்தில் மூடப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவு அண்மையில் பிறப்பித்திருந்தது.

மேலும் தமது வான் பரப்பில் கத்தார் விமானசேவை விமானங்கள் பறக்கவும் சவுதி தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. மாற்று ஏற்பாடு இன்றி திடீரென சவுதி மேற்கொண்ட இந்த முடிவுகளால் சவுதியிலும் கத்தார் விமான நிலையத்திலும் சர்வதேச பயணிகள் கடும் சிக்கலை எதிர் கொண்டதுடன் சவுதி விமான நிலையங்களில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு கத்தார் தலைநகர் டோஹாவிலுள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் அரேபியத் தீபகற்பத்திலும் வளைகுடா பிராந்தியத்திலும் மிகவும் பிராந்திய முக்கியத்துவம் மிக்க விமான நிலையமாகத் தொழிற்பட்டு வருவதே காரணம் ஆகும்.

இதனால் இந்த வளைகுடா நாடுகள் அனைத்தினதும் விமான சேவை நிறுவனங்களுமே தமது விமானங்களை இயக்குவதில் தடங்கல்களை எதிர் கொண்டுள்ளன. உலகத் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் பேரில் கத்தார் நாட்டுடன் சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம், யேமென் மற்றும் லிபியா ஆகிய 6 நாடுகள் தமது தூதரக உறவைத் திடீரென துண்டித்துள்ளன.

இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள கத்தார் நிலமையை சீராக்க இம்முடிவை எடுத்துள்ள நாடுகள் தம்முடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விதித்துள்ளது. மேலும் இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க துருக்கியும் குவைத்தும் முன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer