“வெற்றிடமாகியுள்ள வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சுப் பதவிகளில் ஒன்றை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்க வேண்டியது அவசியமானது. இதனை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்தில் கொள்ள வேண்டும். ஆயினும், அமைச்சு விடயத்தில் முதலமைச்சருக்கு எந்தவித நெருக்கடியையும் நாம் வழங்க விரும்பவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வெற்றிடமாகியுள்ள அமைச்சுப் பதவிகள் இரண்டிற்கும் யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான ஆரம்ப கட்டப் பேச்சுக்களில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அதனொரு கட்டமாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை நேற்றுமுந்தினம் சனிக்கிழமை முதலமைச்சர் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சப் பதவிகள் தொடர்பில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சுப் பதவிக்காக கட்சி ரீதியில் கோரிக்கையை விடுத்து வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நெருக்கடியை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை. தற்போது அமைச்சுப் பதவிகள் தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் பெயர்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எந்தக் கட்சியின் ஊடாகவேனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முதலமைச்சர் கவனத்தில் எடுக்கலாம் என்பது எனது கோரிக்கை. நியமிக்கப்படவுள்ள இரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் ஒரே மாவட்டத்துக்கு வழங்குவார் என்று நான் நினைக்கவில்லை.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
முல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதலமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும்: சித்தார்த்தன்
Tuesday, June 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment