Thursday, June 1, 2017

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றினை மாணவர்களுக்கு பாடமாகப் புகட்ட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றோடு (யூன் 01) 36 வருடங்களாகிறது. அதனை நினைவு கூரும் நிகழ்வு யாழ். பொது நூலக வாயிலில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ். பொது நூலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், 36 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கட்டடம் இடிக்கப்பட்ட கோரக்காட்சி இன்னும் எம் கண்முன் தோன்றுகின்றது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பண்பாட்டு அழிப்பில் வரலாற்று ரீதியான பல அரிய ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பண்பாட்டு அழிப்பு பின்னர் இன அழிப்பாக உருவெடுத்தது. இவ்வாறாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த நூலகம் எரிக்கப்பட்ட தினத்தை நாம் காலகாலமாக நினைவுகூருவதுடன், நூலகம் எரிக்கப்பட்டமை வரலாற்று பாடமாக மாணவர்களுக்கு புகட்டப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer