வித்தியாசமான நோய்களை அடிப்படையாக வைத்து பல தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதில், அதிகமாக மூளை, ஞாபகம் சார்ந்த நோய்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு புறம், அந்நியன், 3, கஜினி என மிக தீவிரமான படங்களும், மறுபுறம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போல மிகுந்த நகைச்சுவையான படங்களும் இந்த வரிசையில் இருக்கின்றன. 'பீச்சாங்கை', மூளைக்கும் இடது கைக்குமான தொடர்பில் ஏற்படும் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கிறது. வித்தியாசமான, சுவாரசியமான நோய் தான்.
'பிக் பாக்கெட்' திறமைசாலியான S.முத்து என்கிற ஸ்மூதுக்கு பலமாய் இருக்கும் அவனது இடது கையே ஒரு விபத்திற்குப் பின் சோதனையாக மாறுகிறது. அவனது மூளை சொல்வதை கேட்காமல், அதன் இஷ்டத்துக்கு செயல்படுகிறது. அதனால் அவன் சந்திக்கும் பிரச்சனைகளும், நிகழும் கலாட்டாக்களுமே பீச்சாங்கை. படம் தொடங்கும்பொழுது, 'ஷார்ட் பிலிம்' உணர்வு ஏற்பட்டு, போகப்போக மறந்துபோகிறது. கடத்தல் குழு, MLA நல்லதம்பியின் குழு என, படத்தின் மிகப்பெரிய பலம், வித விதமாக எழுதப்பட்டுள்ள கதாப்பாத்திரங்களும், அவர்களின் செம்ம ரகளையான குணாதிசயங்களுமே. கோவைத் தமிழ் பேசும் கஜா, அவரது மச்சான், அடியாட்கள் ஜோசப், மாரி ஆகியோர் படு பயங்கர நகைச்சுவை கேங். அவர்களின் கடத்தல் சேட்டைகள் 'சூது கவ்வும்'மை நினைவு படுத்தினாலும் சுவையாகவே இருக்கின்றன. படத்தில், காதல், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால், ' நிகழ்ந்த பிரச்னைகளுக்கு காதல் தான் காரணம்' என ஸ்மூது பேசும் வசனங்கள் அர்த்தமிழக்கின்றன. முடிவில் ஒரு 'சுபம்' போட மட்டுமே காதலும் கதாநாயகியும் பயன்பட்டிருக்கின்றனர்.
நாயகன் 'ஸ்மூது'வாக கார்த்திக், மிக இயல்பாக நடித்திருக்கிறார். தனது 'பீச்சாங்கை' பிரச்சனை செய்யத் தொடங்கும் காட்சிகளில் அவர் காட்டும் அதிர்ச்சியும், அது தன்னிச்சையாய் செயல்படும் பொழுது உடல்மொழியில் தவறேதும் நிகழாமல் நடித்திருப்பதும் அபாரம். அவருக்கடுத்து ஈர்ப்பது கோவை கஜாவின் கேங். 'பையா' பொன்முடி, ஜித்தேந்தர், ஆண்ட்ரூ ஜெயபால், கிருஷ்ணா நால்வரின் தோற்றமும் நடிப்பும் சிறப்பு, சிரிப்பு. விவேக் பிரசன்னா நல்ல வில்லனாக வளர்ந்து வருவார் என நம்பலாம். MS பாஸ்கர், எப்பொழுதும் போல. அளவான வசதியைப் பயன்படுத்தி முடிந்த அளவு நேர்த்தியாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கவுதம் ராஜேந்திரன். ஆனாலும் சில காட்சிகள் மிக எளிமையாக தெரிகின்றன. பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையாகவே ஒலிக்கின்றன, ஓரளவு பலம் சேர்க்கிறது இசை.
அவ்வப்போது வரும் நகைச்சுவைக் காட்சிகள், 'இப்படியெல்லாம் யோசிச்சுருக்காரே' என்று சிரிக்கவைத்தாலும், திரைக்கதை ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு நகர்வதில் வேகம் குறைவு. அதுபோல ஸ்மூதின் 'பீச்சாங்கை' திரும்பத்திரும்ப மற்றவர்களை 'அந்த' இடத்திலேயே பிடிப்பது நெருடல்.
தமிழ் படங்களில் சமீபமாக ஏற்பட்ட நகைச்சுவை தட்டுப்பாட்டைத் தன் பீச்சாங்கையால் சற்றே சரி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அசோக்.
Tuesday, June 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment