Saturday, June 3, 2017

உலகின் சுற்றுச் சூழல் நலனில் முக்கிய செல்வாக்கு செலுத்தும் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பானது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகின் தட்ப வெப்ப நிலையை 2 செல்சியஸுக்கு குறைவாக்க வேண்டும் என்று கூறும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் பட்சத்தில் உலகநாடுகளுக்கு அதிகரித்து வரும் பூகோள வெப்பமயமாதலை எதிர்த்துப் போராட அந்நாடுகளுக்கு இதுவரை அமெரிக்கா அளித்து வந்த நிதி மற்றும் தொழிநுட்ப வசதிகள் கிடைப்பது குறைந்து போகும். மேலும் பூகோள வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிக்கும் வளி மண்டலத்தில் அதிகரித்து வரும் காரியமில வாயுவின் அளவில் 15% வீதம் அமெரிக்காவின் பங்காகும்.

இந்நிலையில் அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவு ஒரு வரலாற்றுத் தவறாக மாறி எமது தலைமுறைகளை நிச்சயம் பாதிக்கும் என சியாரா கிளப்பை சேர்ந்த மைக்கேல் ப்ரூனே என்ற அமெரிக்க சுற்றுச் சூழல் ஆர்வலர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலகப் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றி வரும் பிற தேசங்களில் ஒன்றான சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பாரிஸ் ஒப்பந்தப்படி தொடர்ந்து கைகோர்த்து முன்னோக்கி செல்லும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதை அந்நாட்டில் இயங்கி வரும் பாரிய வர்த்தக நிறுவனங்கள் எதிர்க்கும் அதேநேரம் அமெரிக்கா வெளியேறினாலும் அங்கிருந்து வெளிப்படும் காரியமில வாயுவின் அளவு அதிகரிக்காது வீழ்ச்சியடைந்தே செல்லும் என்றும் கூறப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணமாக மின்சார உற்பத்திக்கு உலகளாவிய ரீதியில் நிலக்கரியின் பயன்பாடு பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதும் இயற்கை எரிவாயு, காற்றாலை மற்றும் சூரிய ஒளியில் மின்சாரம் போன்ற மாற்று எரிபொருள் உற்பத்தி சாதனங்களின்ன பயன்பாடு அதிகரித்து வருவதும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer