“டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சிகள் வெளியிட்ட வீடியோ காட்சிகளில் இருப்பது நானே. ஆனால், குரல் என்னுடையதல்ல.” என்று அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு பிறகு, இரண்டாக அதிமுக பிளவுபட்டு நின்ற நேரத்தில், சசிகலாவை ஆதரிப்பதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கூறிய வீடியோ காட்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை ‘டைம்ஸ் நவ்’ மற்றும் ‘மூன்’ தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த சரவணன் நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை வந்து, ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து விளக்கம் அளித்தார். பின்னர், வெளியே வந்த சரவணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த சம்பவத்தை பற்றி என்னிடம் விசாரித்தார். நடந்ததை கூறினேன். அந்த சம்பவமானது முற்றிலும் தவறானது, பொய்யானது. நான் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், நான் கட்சி மாறி போய்விட்டேன், வேறு அணிக்கு போய்விட்டேன் என்று கூறினார்கள். அப்போது, நான் அந்தக் கூட்டத்தில் தான் இருந்தேன்.
இந்த மாதிரி கடந்த 10 நாட்களாக தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. நானும் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். நேற்று வெளியான வீடியோ காட்சி தவறானது என்பதை ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்து கூறியுள்ளேன்.” என்றுள்ளார்.
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment