Tuesday, June 27, 2017

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அரசியல் அதிகாரங்களைப் பகிர்வதற்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணங்கியுள்ள நிலையில், அதனை சீர்குலைப்பதற்காக சில தரப்புக்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான தேசிய அமைப்பு ஹொரண பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையிருந்தாலே யுத்தம் ஏற்படாமல் தடுக்க முடியும் என முன்னெடுக்கப்படும் பிரசாரம் போலியானது. நிறைவேற்று ஜனாதிபதி முறையாலேயே நாட்டில் யுத்தம் ஏற்பட்டது.

நாட்டில் இருக்கும் பிரச்சினை போதாது என்று அரசியலமைப்பு தொடர்பில் கதைப்பதாகக் கூறி மக்கள் மத்தியில் மேலும் பிரச்சினைகளை வளர்த்துவிடுகின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவது, தேர்தல் முறையை மாற்றுவது, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட விடயங்கள் அரசியலமைப்புத் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

இன, மத, குல பிரச்சினைகளை உருவாக்கும் சிலரும் இருக்கின்றனர். மனிதநேயம் கண்டுபிடிக்கப்படவேண்டியுள்ளது. சில வெளிநாடுகளில் இன, மத, குலம் பற்றிப் பார்ப்பதில்லை. நாம் ஏகாதிபத்திய முறையையும் விரும்பவில்லை. ஜனநாயகத்துக்கும், சுதத்திரத்துக்குமே நாம் ஆதரவளிக்கின்றோம்.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி முறைக்கு, நான் அன்றே எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். முன்னாள் ஜனாதிபதி இந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கு முயற்சித்து, தனக்கான அதிகாரங்களை கூட்டிக் கொண்டார்.

அதன் பின்னர் அதிகாரங்கள் கூட்டுவதற்கு முன்னின்று செயற்பட்டது பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் என்றனர். எனினும், ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்ற சரத்து மாற்றப்பட்டு, ஜனாதிபதியை விமர்சிக்கக் கூடியவாறான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி தனக்கான அதிகாரங்களைக் குறைத்துள்ளார்.

தேர்தல் முறை மாற்றப்படாவிட்டால், தேர்தலுக்காக பெருமளவு பணம் செலவிடவேண்டி ஏற்படும். சமூகத்தில் பொது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்துக்குக் கிடைக்காமல், முதலாளிமாரே பாராளுமன்றத்துக்கு வருவார்கள். இன, மத அடிப்படையான போராட்டங்களால் நாடு பின்நோக்கிச் சென்றுள்ளது. மனிதநேயம் இல்லாமல் போயுள்ளது என்பதை எவரும் உணரவில்லை. ஏனைய மதங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

எதிர்கால குழந்தைகளின் மனங்களிலும் இன, மத, குல பேதங்களை உருவாக்க வேண்டும். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்கள அரசியல் வாதிகள் சிங்கள இனவாதத்தை பரப்பினார்கள். தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் இனவாதத்தைப் பரப்பினார்கள். அதன் பின்னர் முஸ்லிம் இனவாதம் உருவானது.

சமஷ்டி முறை தொடர்பில் முதன் முதலில் கருத்துக் கூறியது பண்டாரநாயக்கவாகும். யுத்தமொன்று ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்க நிறைவேற்று ஜனாதிபதி முறை அவசியம் என அரசியல்வாதிகள் சிலர் கூறிவருகின்றனர். இது என்ன மோசமான வார்த்தையாகும். இது பொய்யானது.

யுத்தம் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது நிறைவேற்று ஜனாதிபதி முறையாகும். இதுபோன்ற கோழைத்தனமான அரசியல் கருத்துக்களுக்கு ஏமாற வேண்டாம். யோசித்து முடிவெடுங்கள். தேசிய பிரச்சினையை அடுத்த சந்ததிக்கும் விட்டுவைக்கவேண்டாம்.

அரசியலமைப்பை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்றை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. எனினும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இதனை சீரழிப்பதற்கு முயற்சிக்கின்றனர். அதிகாரத்துக்கு வர அவர்கள் கொண்டுள்ள பேராசையே இதற்கு காரணமாகும்.

வடக்கில் அபிவிருத்தி மேற்கொள்ளும்போது அபிவிருத்தி செய்ய வேண்டாம் எனக் கூறவேண்டும். பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. அதிகாரப் பகிர்வுக்கு சிங்கள மக்களும் விருப்பமாக இருக்கின்றனர். இது வரலாற்றில் ஏற்பட்டுள்ள பொன்னான காலமாகும். இதனை தோற்கடிப்பதற்கு சிலர் இன, மத, மொழி வேறுபாட்டைப் பயன்படுத்த முயல்கின்றார்கள்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer