Monday, June 5, 2017

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்து உள்ள டேனிஸ்பேட்டை ஊராட்சி பெரிய வடகம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி முனியம்மாள். இவர்களுக்கு சதீஷ்குமார் (வயது-18), ஜோதிமணி (வயது-16) என்ற இரு மகன்களும், சங்கீதா (வயது-20) என்ற மகளும் இருந்தனர். சதீஷ்குமார் லாரியில் கிளனர் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சதீஷ்குமார் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதற்கிடையில் கை மூட்டு விலகியிருந்த முனியம்மாளுக்கு கையில் கட்டு போடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களது குடும்பத்தினர் தர்மபுரிக்கு சென்று இருந்தனர்.

அங்கு கட்டு போட்டு விட்டு, ஜாதகமும் பார்த்து விட்டு மதியம் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது ஓமலூர் அருகே சேலம் - சென்னை ரெயில் தண்டவாளம் அருகே சதீஷ்குமார் முகம் சிதைந்து, கை, கால்களில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர் சதீஷ்குமார் கடந்த சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் பெரிய வடகம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் இருக்கும் வீட்டுக்கு சென்று உள்ளார்.
அப்போது பெரிய வடகம்பட்டி பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரனான மாரியப்பனின் கார் அவருடைய மாமா தோட்டத்துக்கு செல்லும் வழியில் சாலையோரம் நின்று கொண்டுடிருந்துள்ளது. அந்த வழியாக மோட்டார் பைக்கில் வேகமாக வந்த சதீஷ்குமார் மண் சறுக்கி விட்டு விழுந்ததில், அந்த கார் கதவின் கைப்பிடி சேதமடைந்தது.

பின்னர், விழுந்து எழுந்த சதீஸ்குமார் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்றுவிட்டார். கார் கைப்பிடி உடைந்த நிலையில் இருந்ததை கண்ட மாரியப்பன் மற்றும் அவருடன் வந்த சிலர்,  சதீஷ்குமாரின் வீட்டுக்கு சென்று தனது காரின் கதவு கைப்பிடியை சரி செய்து தரும்படி கூறி தகராறில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்குள் சண்டை ஏற்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு சதீஷ்குமார் “தன்னிடம் இப்போது பணமில்லை, பணம் கிடைத்ததும் திங்கட்கிழமை கைப்பிடியை சரி செய்து தந்து விடுகிறேன்...” என்று கூறி உள்ளார். அப்போது மாரியப்பன் உள்ளிட்ட மூவரும் விலை உயர்ந்த புதிய கார் கதவின் கைப்பிடியை சரி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகும். உன்னால் எப்படி சரி செய்து தர முடியும் என்று கூறி தகராறு செய்து உள்ளனர்.

இந்த நிலையில்தான் வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஷ்குமார் திரும்பி வரவில்லை. பின்னர், மறுநாள் காலை இரயில் தண்டவாளம் அருகே சதீஸ்குமார் பிணமாக கிடந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

சதீஷ்குமார் தண்டவாளத்தை கடந்தபோது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்தாரா..? அல்லது ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா...? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா....? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer