Tuesday, June 27, 2017

ஒரு ரயில் நிலையத்தில் போர்டிங் பள்ளிக்குச் செல்வதற்காக குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் காத்திருக்கின்றனர். ரயில் வண்டி ஒன்று இருப்புப்பாதையில் இழுத்துக் கொண்டு வரும் கிரீச் சத்தம் கேட்கிறது. ஒரு பழங்காலத்து ரயில் உள்ளே நுழைந்ததும், அவரவர் தங்களுக்கான இருக்கைகளைப் பிடித்து அமர்ந்துகொள்கின்றனர். ரயில் பயணம் தொடங்கிய சில நிமிடங்களில், புகைமூட்டமான பாதையைக் கடந்து ரயில் ஒரு அதிசய உலகிற்குள் நுழைகிறது.. இப்படியாக தொடங்குகிறது ஹாரிபாட்டர் திரைப்படத்தின் முதல் பாகம். அழகான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் காட்சிக்கு உயிர் தந்தவர் ஜே.கே.ரவுலிங் எனப்படும் பெண் எழுத்தாளர் தான்.

உலக அளவில் பேசப்படும் ரவுலிங்கின் வாழ்வின் தொடக்க காலம் அவ்வளவு அழகானதாக அமைந்துவிடவில்லை. இளம் வயதில் தன் நோய்வாய்ப்பட்ட பாசமிக்க தாயுடன் வாழ்ந்த ரவுலிங்கிற்கு அவரது தாயும், தங்கையுமே உலகம். சிறு வயதிலேயே கதைகளை எழுதி தன் தங்கையிடம் வாசித்துக் காட்டுவார். இதையெல்லாம் ஒருநாள் புத்தகமாக பதிவுசெய்யவேண்டும் என்ற அவரது தாயின் கனவைத் தவிர வேறெதுவும் மெய்யாகவில்லை அவருக்கு. 1982-ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் நுழைவுத்தேர்வில் தோல்வியுற்று, பின் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் தன் கல்லூரிக் காலத்தை முடிக்கிறார்.

வாழ்வின் எல்லா புறக்கணிப்புகளையும் தாயின் மரணத்தையும் கடந்து, தன் திருமண வாழ்க்கைக்குள் நுழைகிறார். தீராத சண்டைகளுக்குள் மணவாழ்க்கை கடந்து செல்கையில், குழந்தை பிறக்கிறது. விவாகரத்து பெற்று கணவன் பிரிந்து சென்ற பின், தன் குழந்தையுடன் தனிமை வாழ்க்கை வாழ்கிறார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, எல்லாம் முடிந்துபோனதென்று எண்ணி தனது 30-ஆவது வயதில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகையில், இந்த உலகில் எதுவொன்றை மற்றவர்களைவிட தன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று யோசிக்கிறார். மீண்டும் கதைகளை எழுத முடிவு செய்கிறார். வாழ்க்கையின் ஓட்டத்தை மாற்றியமைப்பதற்கான களத்தைத் தீர்மானிக்கிறார்.

1990-ஆம் ஆண்டு மான்செஸ்டரில் இருந்து லண்டன் செல்வதற்கான ரயிலுக்காக காத்திருக்கும் போது தான், ஒரு அதிசயப்பள்ளியில் பயிலும் குழந்தைகளைப் பற்றிய கதையை யோசிக்கத் தொடங்குகிறார். அதை ஒரு நாப்கினில் தான் எழுத ஆரம்பித்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?

குழந்தைகளின் மத்தியில் புத்தக வாசிப்பானது, சினிமாக்களினால் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக்  கூறப்பட்ட காலத்தில், ரவுலிங் தனது மாயஅலைகளை பாய்ச்சினார். ஹாரிபாட்டர் புத்தகங்கள் வந்த சமயங்களில் நூலகங்களில் குழந்தைகள் அந்தப் புத்தகங்களுக்காகக் காத்திருந்து, வாங்கிப் படித்து, தாமதாக வீட்டிற்குச் சென்ற கதைகள் உண்டு. 2005-ஆம் ஆண்டு கார்டியன் இதழ் வெளியிட்ட அறிக்கையில், ஜே.கே.ரவுலிங் எழுதிய புத்தகங்கள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் மத்தியில் இலக்கிய உணர்வைக் கூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 84% ஆசிரியர்கள் ஹாரிபாட்டர் கதாப்பாத்திரமாக வரும் சிறுவன் குழந்தைகளின் மனதில் நேர்மறைக் கருத்துகளை வளர்க்கும்படியாக இருப்பதாகவும், 74% பேர் குழந்தைகள் பாட்டர் நாவல்களைத் தேடிப்படிப்பதைக் காண்கையில் ஆச்சர்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

1995-ஆம் ஆண்டு ரவுலிங் தன் முதல் புத்தகத்தை எழுதிமுடித்த போது அதை பதித்து வெளியிட எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 12-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் அந்தக் கதையைப் புறக்கணித்தன. இருந்தபோதிலும், ப்ளும்பரி பதிப்பகம் மட்டும் அந்த நாவலை வெளியிட தலையசைத்தது. ‘ஹாரிபாட்டர் அண்ட் தி ஃபிளாஸஃபர்ஸ் ஸ்டோன்’ என்ற அந்த முதல் புத்தகம் 1000 பதிப்புகளாக அச்சிடப்பட்டன. அதில் 500 புத்தகங்கள் நூலகங்களுக்கு விலையில்லாமல் அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது வரையில் ரவுலிங்கின் புத்தகங்களின் 450 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்ந்துள்ளன. அவரது முதல் புத்தகம் வெளியிடப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.

பெரும்பலான ஹாரிபாட்டர் பக்கங்களை ரவுலிங் ‘கஃபே’-க்களில் வைத்து தான் எழுதியுள்ளார். அதற்குக் காரணம் வெளியில் தூக்கிச் சென்றால் உடனே தூங்கிவிடும் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, பொடிநடையாய் நடந்து சென்று எங்கேனும் கஃபே-க்களில் அமர்ந்து கதை எழுதுவது அவரது வழக்கம். ஹாரிபாட்டர் கதையில் வரும் எம்மா வாட்சன் கதாப்பாத்திரமான, ஹெர்மோயின் க்ராங்கரை தன்னை மனதில் வைத்தே எழுதியதாக அவரே பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

“வாழ்க்கையில் நம்மால் முடியுமென்ற தைரியம் இருந்தால், எதுவுமே சாத்தியம் தான்” எனச் சொல்லும் ரவுலிங், சாவிலிருந்து மீண்டு வாழ்ந்து சாதித்திருக்கிறார். வாழ்வில் ஏதாவதொரு சூழலில் எல்லோரும் புறக்கணிப்புகளை சந்திக்க நேரிடும். தன்னை மீட்டுக் கொள்ள முயல்பவர்கள் மட்டுமே அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்களை உலகமே புகழ்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer