Thursday, June 1, 2017

மோடி அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்பில் தகவல் தெரிய வந்துள்ளது. டைம்ஸ் நவ் ஆங்கில டி.வி. சேனல், வோட்டர்ஸ் மூட் ஆய்வு அமைப்புடன் சேர்ந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து தற்போது வாக்களர் மன நிலை எப்படி உள்ளது? என்பதை அறிவதற்காக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 52 எம்.பி. தொகுதிகளில் 15 ஆயிரத்து 600 பேரிடம் கருத்து கணிப்பை நடத்தி உள்ளன. கடந்த 8-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கிராமம், நகரம், ஆண், பெண் மற்றும்  அனைத்து வயதினர் என வீடு, வீடாக சென்று கருத்து கணிப்பை நடத்தி இருக்கிறார்கள்.

அதில், பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதுடன் பாரதிய ஜனதாவின் செல்வாக்கும் கடந்த பாராளுமன்ற தேர்தலை விட அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு ஓட்டு அளிப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலானோர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.இதன்படி கடந்த பாராளுமன்ற தேர்தலை விட 11 சதவீத ஓட்டு பாரதிய ஜனதாவுக்கு அதிகரித்துள்ளது. இப்போது தேர்தல் நடந்தால் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 342 இடங்கள் கிடைக்கும். பாரதிய ஜனதா
கட்சிக்கு மட்டும் 284 இடங்கள் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் மோசமான நிலையை சந்திக்கும் என்றும், அந்த கட்சிக்கு 58 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

நாட்டில் செல்வாக்குள்ள தலைவர்கள் யார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 60 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 11 சதவீத ஆதரவே உள்ளது. கெஜ்ரிவாலுக்கு 3.64 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுவரை இருந்த பிரதமர்களில் யார் சிறந்தவர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நரேந்திர மோடிக்கே அதிக ஆதரவு உள்ளது. 31 சதவீதம் பேர் நரேந்திர மோடி சிறந்த பிரதமர் என்று கூறி இருக்கிறார்கள். 2-வது இடத்தை இந்திராகாந்தி பிடித்துள்ளார். அவருக்கு 23 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுவரை செல்வாக்கு இல்லாமல் இருந்த மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆழமாக காலூன்றும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இப்போது மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தால் அங்கு 33 சதவீத ஓட்டுகளை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. கடந்த தேர்தலில் 17 சதவீத ஓட்டுகள் மட்டுமே பாரதிய
ஜனதாவுக்கு கிடைத்தது.

அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 40 சதவீதம் ஓட்டுகளை பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் இப்போது 37 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடியும் என்று கூறுகிறது..அந்த மாநிலத்தில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்த கம்யூனிஸ்டு கட்சிகள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அங்கு கடந்த தேர்தலில் அவர்கள் 30 சதவீத ஓட்டுகளை பெற்றனர். அது 17 சதவீதமாக குறையும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 2014 பாராளுமன்ற தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி 45 சதவீத ஓட்டுகளை பெற்றது. இப்போது 37 சதவீத ஓட்டுகளே அந்த கட்சிக்கு கிடைக்கும். அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 21 சதவீத ஓட்டுகளை பெற்ற  பாரதிய ஜனதா இப்போது 42 சதவீத ஓட்டுகளை பெறும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

ஒடிசாவில் மற்றொரு பெரிய கட்சியான காங்கிரஸ் கடந்த தேர்தலில் 26 சதவீத ஓட்டுகளை பெற்றது. இப்போது 13 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடியும் என்று தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு 66 சதவீதம்
பேர் ஆதரவு அளித்துள்ளனர். அதே நேரத்தில் அந்த நாட்டின் மீது ‘சர்ஜிகல் ஆபரேஷன்’ போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று 72 சதவீத மக்கள் கூறி உள்ளனர்.

முஸ்லிம்கள் 3 முறை தலாக் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது, மறுமலர்ச்சி நடவடிக்கை என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer