Tuesday, June 27, 2017

மொங்கோலியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களுமே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பெரும்பான்மை வாக்குகளைப் பெறத் தவறிய காரணத்தினால் ஜூலை 9 ஆம் திகதி அங்கு வரலாற்றில் முதன் முறையாக அதிபர் தேர்வுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.

சீனாவுடனும் ரஷ்யாவுடனும் கடும் கடன் சுமையைக் கொண்டுள்ள மொங்கோலியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூவருமே ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களாக மக்களால் கருதப் படும் அதே நேரம் அவர்கள் தமது பிரச்சாரத்தின் போது அங்கு நிலவும் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்போம் என உறுதி மொழி அளித்து வந்திருந்தனர். 3 பேரிலும் அதிகபட்சமாக எதிரணியான ஜனநாயகக் கட்சியின் தலைவரான கல்ட்மா பட்டுல்கா என்பவர் 38% வீத வாக்குகள் பெற்ற போதும் அதிபராகக் குறைந்த பட்சம் 51% வீத வாக்குகள் தேவைப் படுகின்றது எனப் பொதுத் தேர்தல் கமிட்டி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியமான IMF உடன் சுமார் $5.5 பில்லியன் கடன் தொகையைக் கொண்டுள்ள மொங்கோலிய அரசு தனது பொருளாதாரத்தை ஸ்திரப் படுத்த வேண்டியுள்ள அதே நேரம் மொங்கோலியாவின் 80% வீத ஏற்றுமதிப் பொருட்களை வாங்கும் நாடாக அண்டை நாடான சீனா விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. மொங்கோலிய மக்களிடம் நம்பிக்கையும் ஒற்றுமையும் மிக அவசியம் என்றும் அனைத்து சமூகங்களையும் இணைக்கும் அடிப்படை உரிமைகளை அளிக்கும் ஒரு தலைவரே எமக்கு இப்போது தேவையாக உள்ளது என மொங்கோலிய மாணவ சமுதாயம் கருதுவதும் நோக்கத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer