Thursday, June 1, 2017

இன்று புதன்கிழமை காலை ஆப்கான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பை இலக்கு வைத்து லாரி மூலம் தீவிரவாதிகள் மோசமான வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சுமார் 80 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளதுடன் 350 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதலை அடுத்து அப்பகுதி முழுதும் ஒரே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றது. 2014 இறுதியில் ஆப்கானில் இருந்து பெரும்பாலான வெளிநாட்டுப் படைகள் வெளியேறிய பிறகு நடத்தப் பட்ட மிக மோசமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இது எனத் தெரிவித்துள்ள ஆப்கான் சுகாதார அமைச்சின் பேச்சாளர் இத்தாக்குதலில் கொல்லப் பட்டவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் கூட அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இக்குண்டு வெடிப்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் எவரும் பலியானதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை எனினும் தமது தூதரக ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக ஜேர்மனியும் பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதல் நடத்தப் பட்ட பகுதி ஆப்கானின் அதியுயர்ந்த பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கான் தலிபான் அமைப்பு உட்பட இதுவரை எந்த ஒரு தீவிரவாதக் குழுவும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில் சர்வதேச நாடுகள் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer