Thursday, June 29, 2017

ஐரோப்பாவில் குடியேறும் நோக்கத்தோடு லிபியாவில் இருந்து  படகுகளில் சென்ற கிட்டத்தட்ட 5000 அகதிகள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் இத்தாலி கடற்படையால் மீட்கப் பட்டுள்ளனர்.

அங்காரா கடல் எல்லை வழியாக கிரீஸ் இற்குள் செல்வதைத் தவிர்த்து பிரான்ஸ் அல்லது ஜேர்மனிக்குள் நுழைந்து விடலாம் என்ற கனவில் தரம் குறைந்த ரப்பர் படகுகளில் அளவுக்கதிகமாகப் பயணிக்கும் லிபிய அகதிகள் மிக மோசமான குளிரையும் எதிர் கொண்டு ஆபத்தான முறையில் கடற் பயணம் செய்வதால் பெரும்பாலும் இவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலையே ஏற்படுகின்றது.

இதனால் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் எதிர்பாராத விபத்துக்களில் சிக்கி 3000 பேர் வரை நீரில் மூழ்கிப் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை மத்திய தரைக் கடல் வழியாக ரப்பர் மற்றும் மரப் படகுகளில் அளவுக்கதிகமாக வந்து நடுக்கடலில் தத்தளித்த சுமார் 5000 குடியேறிகளை இத்தாலிக் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் ஆனால் இதன் போது 24 பேரைக் காப்பாற்ற இயலாது அவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகி விட்டதாகவும்  ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் ஜனவரி முதற்கொண்டு ஜூன் 21 ஆம் திகதி வரை சுமார் 72 000 அகதிகள் இத்தாலிக்கு சட்டவிரோதமாக வந்து சேர்ந்திருப்பதாக ஒரு புள்ளி விபரம்  கூறுகின்றது. உலகில் மிக அதிகளவில் அகதிகள் கடல் மார்க்கமாகப் பயணிப்பதும் அதிகளவில் நீரில் மூழ்கி இறப்பதற்குமான பகுதியாக மத்திய தரைக் கடல் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டு லிபியாவில் முன்னால் சர்வாதிகாரி கடாஃபியின் ஆட்சி கவிழ்க்கப் பட்டு அவர் கொலை செய்யப் பட்ட பின்னர் அங்கு அரசியல் நிலமை மிகவும் மோசமாகி அதிகாரப் போர் காரணமாக வன்முறை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த வன்முறைகளில் சிக்கி பலியாவதைத் தவிர்ப்பதற்காகவும் அங்கிருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. இதுதவிர உள்நாட்டுப் போரால் நிலமை மிகவும் மோசமடைந்துள்ள ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் வறுமை காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்தும் அகதிகளாக ஐரோப்பாவுக்குத் தஞ்சம் புகவென வெளியேறும் மக்கள் தொகையும் வருடாந்தம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer