Thursday, May 11, 2017

26.04.2017 புதன் கிழமை. அன்றைய தினம் சென்னை உட்பட தமிழகமெங்கும் ஒரு
செய்தி பரவியது. அந்த செய்திக்கு காரணம் உள்ளாட்சி அலசல் என்கிற வார
பத்திரிகை. அதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியை குறித்து விளாசி
தள்ளியுள்ளனர்.
இந்த பரபரப்பு செய்தி வெளியானதும் பத்திரிகை ஆசிரியரை அமைச்சரின் அதிகார
பிடி சிறைபிடித்தது. அதற்காக பல்வேறு பொய்வழக்குகளை பதியவைத்தது.

முதலில் உள்ளாட்சி அலசல் வார பத்திரிகையை நடத்துவது யார் என்று
பார்த்துவிடலாம். அதன் நிர்வாக மற்றும் செய்தி ஆசிரியரின் பெயர்
வி.அன்பழகன்.

நக்கீரன் வாரபத்திரிகை மற்றும் தினகரன் போன்ற தினசரிகளிலும் பணிபுரிந்து
வெளியேறியவர். கடந்த தமிழக பொதுதேர்தலின் போது ஜெயலலிதாவின் 1000 கோடி
ரூபாய் ஊழல் என்கிற புத்தகத்தை வெளியிட்டார். அப்படியே கலாநிதிமாறன்,
தயாநிதிமாறன் குறித்து கே.டி. பிரதர்ஸ் என்று ஒரு புத்தகத்தை டிடெய்லாக
வெளியிட்டார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் கீழ் பல்வேறு உண்மைகளை கலெக்ட்
செய்து அதனடிப்படையில் பாரபட்சமற்ற செய்திகளை எழுதி வந்தார்.

அதுமட்டுமின்றி 25 ஏப்ரல் 2017 அன்று அன்பழகன், தனது மக்கள் செய்தி
மையத்தின் சார்பில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி, அந்தத்
துறையில் பணியாற்றும் பொறியாளர்களின் மாறுதல்களுக்கு ஒவ்வொரு நிகழ்விலும்
எவ்வளவு லஞ்சம் வாங்கியுள்ளார் என்பதை பட்டியலிட்டு ஒரு விரிவான புகாரை
சி.பி.ஐ.-க்கு அனுப்புகிறார். அந்தப் புகாரை சமூக வலைத்தளங்களிலும் பதிவு
செய்கிறார்.

இந்நிலையில் தான் கடந்த 26 ஏப்ரல் தேதியிட்ட உள்ளாட்சி அலசல் இதழ் 25 ஆம்
தேதி சென்னையில் இருந்து மாவட்டங்களுக்கு டெஸ்பாட்ச் ஆனதும் ஆசிரியர்
வி.அன்பழகன் மீது பொய் புகார்கள் அளிக்கப்பட்டன.அதனடிப்படையில் கோவை
மாவட்டம் ஆலாந்துரை காவல் நிலையத்தினர் காலை 26 ஏப்ரல் அன்று 8.30
மணிக்கு மிகவும் ரகசியமாக கைது செய்து, அவர் வீட்டுக்கு கூட தகவல்
சொல்லாமல் காரில் வைத்து கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பார்த்திபன் என்ற பொறியாளரை 2 லட்ச
ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அன்பழகன் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் வைக்கப்படாமல் வேறு ஒரு தனி
இடத்தில் வைக்கப்பட்டு, இரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். பொறியாளர் பார்த்திபனை சாதிப் பெயரை சொல்லி
திட்டியதாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டப் பிரிவு
சேர்க்கப்பட்டுள்ளது.

2011ல் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கூட பத்திரிக்கையாளர்கள் மீது
அவதூறு வழக்குகளைத்தான் போட்டார். ஆனால், தன்னைப் பற்றி செய்தி எழுதிய
பத்திரிக்கையாளர் மீது முதல்வரின் அனுமதி இல்லாமலேயே கொலை மிரட்டல்
மற்றும் சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக வழக்கு போடும் வழக்கத்தை புதிதாக
தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் வேலுமணி.

இந்த முதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு தாம்பரம் காவல் நிலையத்தில்
இதே போல பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஒரு வழக்கு பதிவு
செய்யப்பட்டது. அந்த வழக்கில் கடந்த வாரம் கோவையிலிருந்து நீதித்துறை
நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே இதே போல தமிழகம் முழுக்க 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
செய்யப்பட்டன. அத்தனை வழக்குகளிலும் ஒரே புகார். எனக்கு இரண்டு லட்ச
ரூபாய் பணம் கொடு. இல்லையென்றால் உன்னைப் பற்றி என் பத்திரிக்கையில்
அவதூறாக செய்தி வெளியிட்டு உன்னை தொலைத்து விடுவேன். உன்னை இல்லாமல்
செய்து விடுவேன். இந்த அனைத்து வழக்குகளிலும் புகார்தாரர்கள் அனைவரும்
உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஊர்களில் பணியாற்றும் ஊழியர்கள். அனைவரும்
வேலுமணியின் துறையின் கீழ் பணியாற்றுபவர்கள்.என்பதுக் குறிப்பிடத்
தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer