Wednesday, May 3, 2017

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2006ஆம் ஆண்டு உலக ஊடக சுதந்திரதினத்திற்கு ஒரு இரவு முன்னதாக, மே மாதம் 2ஆம் நாள் இரவு உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலை நினைவுகூரும் வகையில் ‘வேட்கை’ என்ற பெயரில் அஞ்சலி நிகழ்வொன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் மிக மோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு எதிரானதாக எந்தக் கருத்தும் எமது பத்திரிகையில் வரக்கூடாது என்பதாக அவர்கள் செயற்படுகிறார்கள். தமது தூதரகத்திற்குச் செல்பவர்களிடம் உதயன் பத்திரிகையில் ஏன் எழுதுகிறீர்கள் என்று மிரட்டுகிறார்கள்.

இந்தியக் கலைஞர்களை இங்கு அழைத்து வருவது குறித்து எமது பத்திரிகையில் தனது கருத்தைத் தெரிவித்ததற்காக ஒருவருக்கு இந்தியா செல்லும் விசா வழங்க மறுத்திருக்கிறார்கள். உள்ளூர் கலைஞா்களை ஊக்கிவிக்க வேண்டும் என்றுதான் அவர் கூறியிருந்தார். அது இவர்களுக்குச் சுடுகிறது. உதயன் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார் என்பதற்காக ஒருவரின் கலாநிதிப் படிப்பைப் பாழ்படுத்தியிருக்கிறார்கள். அவர் தனது ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக்கழகத்தில் முன்வைக்கவேண்டிய தருணத்தில் அவருக்கு விசா வழங்காமல் அவரது எதிர்காலத்தையே நாசமாக்கியிருக்கிறார்கள்.

இங்கே இருக்கும் இந்தியத் துணை தூதரகம் மிகமோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவா்களுடைய செயற்பாடுகளுக்கு செய்கைகளையும் பொறுக்கமுடியாதுள்ளது. வந்தார்கள், இருந்தார்கள், போனார்கள், அபிவிருத்தியை செய்தார்கள் என்று இல்லாமல், எங்களை வழிநடத்துவதற்கும் மறைமுகமாக ஆக்கிரமிப்பதற்கும் முயன்றுகொண்டிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகததுக்குப் பொறுப்பானவா் அந்த மாதிரியான செயற்பாடுகளில் இறங்கியுள்ளார். மிகக் கேவலமான முறையில் நடந்து கொள்கிறார். ஒரு தடவை அவர் என்னிடமே நேரடியாகப் பத்திரிகையில் அப்படி எழுதுகிறார்கள், இப்படி எழுதுகிறார்கள் என்று சொன்னார். நடப்பதை மக்களுக்கு சொல்லவேண்டும் அதுதானே பத்திரிகையின் பணி.

இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து சுட்டார்கள். அதில் மருத்துவர்கள், தாதியர் எனப் பலர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதைப் பத்திரிகையில் செய்தியாக வெளியிடுகிறார்கள். இங்குள்ள இந்தியத் தூதர் கேட்கிறார், ஏன் அதனை மீண்டும் மீண்டும் போடுகின்றீா்கள் என்று.

தெற்கில் சீனாவின் கை ஓங்குவதால் வடக்கு கிழக்கை தங்கள் பிடியில் வைத்திருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ தெரியாது. இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபின் தலைமை நிச்சயம் கவனத்தில் எடுத்து நடந்துகொள்ளவேண்டும்.

நடராஜன் இந்திய துணைத்தூதுவா் அல்ல. அவரது பதவியின் பெயா் அது அல்ல. அவரது பதவியின் பெயர் கொன்சூலர் ஜெனரல். அவர் ஒரு அதிகாரி. அவ்வளவே! அவருக்கு மேலே தூதரகத்தில் அதிகாரம் உள்ள பதவிகள் எத்தனையோ உள்ளன.

பத்திரிகை உண்மையை உண்மையாகச் சொல்லத்தான்வேண்டும். அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எந்தச் செய்தியைப் போடவேண்டும் எதைப் போடக்கூடாது என்று சொல்லக்கூடாது. வெளியிட்ட செய்தியில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் அல்லது அது தொடர்பில் நீங்கள் ஏதாவது தீர்வைப் பெறவேண்டியிருக்கிறது என்றால் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறையிடுங்கள். பத்திரிகையில் உள்ள பிழையை சுட்டிக்காட்ட எல்லாருக்கும் உரிமை உள்ளது. அதற்காக அதன் சுதந்திரகத்தைக் கட்டுப்படுத்த, அதனை மிரட்ட முனையக்கூடாது. எங்களிடம் பிழை இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதைச் சுட்டிக்காட்டுங்கள்.

இதற்காக நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள், இந்தியாவை வெறுப்பவர்கள் என்று அர்த்தம் அல்ல. இங்குள்ள சில அதிகாரிகளின் செயற்பாடுகளால் அவ்வாறான ஒரு நிலை வந்துவிடுமோ என்றுதான் அஞ்சுகின்றோம். தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என்பதில் எமக்கு கருத்து வேற்றுமை இல்லை. இந்தியா ஈழத் தமிழர்களின் பக்கம் இருக்கவேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் புதுடில்லியால் இங்கு நியமிக்கப்படும் அதிகாரிகளோ இந்தியாவையும் ஈழத் தமிழர்களையும் பகைத்துக்கொள்ளச் செய்துவிடுவார்கள் போன்று உள்ளது” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer