Saturday, May 13, 2017

'NEET' தேவையா இல்லையா... 'NEET' எழுதச்  சென்ற மாணவர்களுக்கு நடந்த 'சோதனை'கள்... வெவ்வேறு மொழிக்  கேள்விதாள்களில் பாரபட்சங்கள், உயர் மருத்துவக்கல்வியில் தங்களுக்கிருந்த இட  ஒதுக்கீடு தொடரவேண்டும் என்பதற்காக அரசு மருத்துவர்கள் நடத்தும் போராட்டங்கள் என மருத்துவக்கல்வியை சுற்றி சூடான விவாதங்கள் நடந்து வரும் சூழ்நிலைக்குத் தொடர்புடைய திரைப்படத்தை சரியான நேரத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு  முன், ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடம் வாங்கித்தர கோடிக்கணக்கில்  பணத்தை வாங்கிய  ஏஜென்ட் தலைமறைவானது, அங்கீகாரம் இல்லாமல்  மாணவர்களை சேர்த்துவிட்டு ஏமாற்றிய கல்லூரி, கல்விக்கு சம்மந்தமில்லாத கல்வித்தந்தைகள்,  இப்படி நிகழ்காலத்தின் பிரச்சனையையும் சம்பவங்களையும் படமாய்த்  தந்திருக்கிறார் இயக்குனர் சக்தி ராஜசேகரன்.

ஊரிலிருந்து சென்னை வந்து,  சொந்தத் தொழிலைத் தொடங்கி, தன் உழைப்பால்  முன்னேறி வரும் தன்னம்பிக்கை  நிறைந்த  இளைஞராக  கலையரசன்.  குடும்பத்தின் மீது பாசம், அவர்களுக்குத் தெரிந்த காதல், தொழில்த் துணையாய் நண்பன்  என எல்லா வகையிலும் நிறைவாய் செல்கிறது வாழ்வு. பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் கவுன்சிலிங்கில் மருத்துவக்கல்லூரி இடம் கிடைக்காத  தங்கையின் சோகத்தைப் பார்த்து, பணம் செலவழித்து 'மேனேஜ்மென்ட் கோட்டா'வில் சேர்க்க முயற்சிக்கிறார்.  இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தரகர்களைப் பிடித்து, தன்னால்  ஏற்பாடு செய்ய முடிந்த ஐம்பத்தி ஆறு லட்சம் பணத்திற்கு ஏற்ற ஒரு கல்லூரியில் இடம் கிடைக்க, மகிழ்ச்சியுடன் தங்கையை சேர்க்கிறார். சில நாட்களிலேயே அந்தக் கல்லூரிக்கு அந்த ஆண்டுக்கான அங்கீகாரம் இல்லை எனத் தெரியவர, பிரச்சனை தொடங்குகிறது. பணத்தை, அவர்களாகத்  திரும்பத் தரமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களை கலையரசன் என்ன செய்தார், கலையரசனை அவர்கள் என்ன செய்தார்கள் என்பதே திரைப்படம்.  

நிகழ்காலத்தின் பிரச்னையைப் பேசுதல், கல்வியில் அநீதி நடக்கும் காட்சியில் இருட்டில் இருக்கும் காமராஜர் சிலை, வன்முறை நடக்கும் இடத்தில் காந்தி படம், ஒரு காட்சியில் அடியாள் ஒருவர் தன் தலைவனுக்கு சிகரெட்டைப் பற்ற வைக்கிறார், அவர் அவருக்கு மேலே உள்ளவருக்கு பற்றவைத்துக் கொடுக்கிறார், இப்படி பணமும் அதிகாரமும் வன்முறையும் உள்ளவர்களின் அடுக்குகளைக் காட்டிய விதம் என பல விஷயங்களில் தன் தடத்தைப்  பதிக்கிறார் இயக்குனர்.  கலையரசன் தன்னம்பிக்கையும் கோபமும் கொண்ட இளைஞனாய் மிகவும் பொருத்தமாய் இருக்கிறார். சத்னா டைட்டஸ் போலீஸ் SI ஆக நம்பும்படியும், நம்பமுடியாதபடியும் கலந்து இருக்கிறார். வேல ராமமூர்த்தி, ராஜ்குமார், வினோத் என நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். பணக்கார, ஸ்டைலிஷ் வில்லன்கள் வரிசையில்  வந்திருக்கும் கெளதம் நன்றாக நடித்திருந்தாலும், அவரது செயல்கள் பெரும் அழுத்தம் இல்லாது இருப்பதால் ஈர்க்கவில்லை. பிரேம் குமாரின் ஒளிப்பதிவில் கோணங்கள்   கவனிக்க வைக்கின்றன. வழிப்பரிக்காரர்களால் கார் பறிக்கப்பட்டு, உள்ளாடையுடன் உட்கார வைக்கப்பட்ட வில்லன் எவ்வளவு பெரிய ஆள் என காட்டும் அந்த காலைக் காட்சி ஒரு எடுத்துக்காட்டு. இசையமைப்பாளர் பார்த்தவ் பர்கோவின் பெயர் இருக்கும் அளவு பாடல்கள் புதிதாய் இல்லை. ஒவ்வொரு பாடலும் புத்துணர்ச்சி தருவதாய் இருக்க வேண்டிய தேவை இப்பொழுது இருக்க, ஒரு பாடல் கூட கவனம் ஈர்க்காதது வருத்தம்.

தங்கைக்கு மருத்துவக் கல்லூரி இடம் வாங்க முயற்சி செய்யும் முதல் காட்சியிலேயே நமக்கு தெரிந்து விடுகிறது பணம் வீணாகப் போகிறது என்று. பார்க்கும் நமக்கே சிறு நம்பிக்கையும் தராத அந்த கும்பலிடம், தனக்கு மிக அதிகமான தொகையை பாடுபட்டு ஏற்பாடு செய்து, கலையரசன் தருவதே பார்ப்பவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் போக, அதற்கடுத்து அதனால் ஏற்படும் இழப்பு, சோகம், கோபம் நமக்கு வராமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. துருவங்கள் பதினாறு, மாநகரம் படங்களைப் போல  தற்செயல்   சம்பவங்கள்  உண்டாக்கும் பிரச்சனைகளைக் கொண்டு நகர்கிறது படம். பல தற்செயல்கள் இருப்பது இடர். கதாநாயகன் ஏற்கனவே வில்லனை எதிர்த்து செயல்பட தொடங்கிய பின்பும், உடனிருக்கும் நண்பன், "எனக்கே கோபம் வருது...நீ எப்படி பொறுமையாக இருக்கிறாய் ?" என்று கேட்டுக்கொண்டே இருப்பது ஏன் என்று குழப்பமாக இருக்கிறது. ஒரு வேளை அவரே வேறு விறுவிறுப்பான  மசாலா படமாக இது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாரோ?   மாணவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறும் கலையரசன், பெரிதாகவோ, சுவாரஸ்யமாகவோ எதுவும் செய்யாதது குறை.

படம் தொடங்கியதில் இருந்தே கதையும் தொடங்கும் நல்ல பாணியில், இன்னும் கொஞ்சம் சுவாரசியமும் கொண்டு இருந்தால் மிக நல்ல படமாக ஆகியிருக்க வேண்டிய படம் எய்தவன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer