வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்ட 7,400 கடிதங்களில், ஒன்றுக்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை எனறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டம் 80வது நாளை கடந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பங்கு கொண்டுள்ளோம். எனினும், தமிழ் மக்களது பேராதரவைப் பெற்று ஆட்சியமைத்த இந்த தேசிய அரசாங்கம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உருப்படியான எந்தப் பதிலையும் இதுவரையிலும் வழங்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டுமென கோரி, 7,400 பொதுமக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளனர். ஆனால், தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட, அவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்துக்கேனும், ஜனாதிபதியால் பதில் அனுப்பி வைக்கப்படவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்பது தொடர்பிலான பதிலை, அவர்களின் உறவினர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் போராட்டத்தை நடத்துகின்ற இந்த தகரக் கொட்டகைக்குள் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது. அகோரமான வெப்பமான நிலைமை, இடைக்கிடையே கடுமையான மழை, அத்துடன் வாகனங்களின் இரைச்சல், இரவில் நுளம்புக்கடி என்பவற்றுக்கு மத்தியில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
வயது போனவர்கள், நோயாளிகளாக இருப்பவர்கள் தமது பிள்ளைகளுக்காக சாத்வீகமான முறையில் தங்களது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தெற்கில் இருக்கக் கூடிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களது தாய், தந்தை, சகோதரர்கள் வீதியில் 80 நாட்கள் இருப்பதற்கு அனுமதிப்பார்களா..?, அவ்வாறு, அவர்கள் இருப்பார்களாக இருந்தால், அங்கு இருக்கக் கூடிய பௌத்த மதத்தலைவர்கள் மக்களுக்காக நீதி கேட்டு போராடுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கும்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழர்கள் என்ற ஒரு காரணத்துக்காக, தெற்கில் இருக்கக் கூடிய இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கக் கூடிய விடயமாகும்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் இல்லை: சிவசக்தி ஆனந்தன்
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment