Wednesday, May 17, 2017

நாம் வாழும் வாழ்க்கைக்கு இணையாக ஒரு இணையத்தள வாழ்க்கை இன்று பலருக்கும் இருக்கிறது. அதில் இருக்கும் நட்பு நேரில் இருப்பதில்லை. அந்த வாழ்வில் இருக்கும் சுதந்திரம் நிஜ வாழ்க்கையில் கிடைப்பதில்லை. பலரது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் வன்மமும், சபலமும் அங்கு கொட்டிக்கிடப்பதை நாளும் பார்க்கிறோம். பல விஷயங்களில் வரமாய் இருக்கும் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, சில விஷயங்களில் ஆபத்தானதாக இருக்கிறது. இணைய உலகத்தில் நம்மை சுற்றி மலை மலையாக கொட்டிக்கிடக்கும் தகவல்கள்,  பொழுதுபோக்குகளில் எது உண்மை,  எது பொய், எது நன்மை, எது தீமை, என்பதை சரிபார்க்கும் பொறுமை யாருக்கும் இல்லை. பொருளாய் எதையும் பகிரத் தயாராய் இல்லாத நாம், இந்த செய்திகளைப் பகிர்வதில் வள்ளல்கள். அப்படி பகிரப்படும் பல செய்திகளில் அடுத்தவர்களின் அந்தரங்கமும் அடங்கும்.    நம் விரல்களின் சில நொடி வேலைகளால் சிலரின் முழுவாழ்வும் எப்படி பாதிக்கப்படுகிறது என்ற பேசாப்பொருளை பேசத் துணிந்திருக்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

வெளியே வெற்றிகரமான மென்பொருள் பொறியியலாளராக இருக்கும் அரவிந்த், உள்ளே சபலம் நிறைந்த சமூகவலைதள பயன்பாட்டாளர். மனைவியை புறக்கணித்துவிட்டு 'ஸ்கைப்'பில் யாரோ ஒரு பெண்ணுடன் உறவு பாராட்டுகிறார்.  பெண் என  பொய் அடையாளத்துடன் அரவிந்திடம் பழகும் ஆணான யோகன் அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வைத்து, அரவிந்தை என்ன செய்தார்,  ஏன் செய்தார் என்பதே 'லென்ஸ்'. இந்தக் கதையை எடுக்கவும்,  அதில் அவரே நடிக்கவும் துணிந்த ஜெயப்பிரகாஷிற்கு பாராட்டுகள். யோகனாக நடித்திருக்கும் ஆனந்த் சாமி, நடிப்பில் 'வர்ணஜாலம்' காட்டியிருக்கிறார். மிரட்டும் சைகோ போல நமக்கு அறிமுகமாகி பின் அதற்கான நியாயங்கள்  தெரிய வரும்போது கூத்துப்பட்டறையின் தேர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அஸ்வதி லால் கடிதத்தின் மூலம் தன் கணவனிடம் பேசும் அந்த கண்ணீர் வரிகள், நம் ஒவ்வொருவரின் மனசாட்சியுடன் பேசுகின்றன.

ஜி.வி.பிரகாஷின் அந்த ஒரு பாடல் அத்தனை அழகு. அந்தப் பாடலில் வரும் யுகபாரதியின் ஒவ்வாெரு வார்த்தையும் அழகு. இரண்டு அறைகள், மூனாறின் சில இடங்கள் என சின்ன வட்டத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதை கதிரின் ஔிப்பதிவும், சுவாரசியமான வசனங்களும் மறக்கச் செய்கின்றன.

இது குழந்தைகள் பார்க்கக் கூடிய படம் அல்ல. பலருக்கு, 'இப்படியெல்லாமா நடக்கும்' என்று தாேன்றலாம்'. ஆனால் தகவல் தாெழில்நுட்ப வளர்ச்சியை ப் பயன்படுத்தும், பங்கு பெரும் அனைவரும்  பார்க்க வே ண்டிய படம். வியாபாரச் சவால்கள் மிகுந்த  இத்தகைய படத்தை இணைந்து வெளியிட்டிருக்கும் வெற்றிமாறனின்  சினிமா, சமூகக் காதல் மரியாதை க் குரியது.

பாகுபலி பாேன்ற படங்கள் சினிமாவின் பிரம்மாண்ட சாத்தியங்களைக் கூறுகின்றன வென்றால், சின்ன அமைப்பில் பெரிய பிரச்சனைகளை வீச்சுடன் சாெல்லப் பயன்படும் சினிமாவின் சாத்தியங்களைக் அழுத்தமாகக் கூறியிருக்கிறது 'லென்ஸ்'.

0 comments :

Post a Comment

 
Toggle Footer