Wednesday, May 3, 2017

முன்னாள் போராளிகளை இணைத்துக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முன்னாள் போராளிகள் தொடர்பிலான தீர்மானம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து இறுதி மோதல்களின் போது, அரச படைகளிடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை முறை, சரியான வழிவகைகளில் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சமூகத்துக்குள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டு, சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். அரசியல் வாழ்க்கைக்கு சரியான விதத்தில் உரிய நேரத்தில் கதவு திறக்கப்பட்டு அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்”

இறுதி மோதல்கள் நிறைவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் முடிவுகளை எடுக்கும் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி, முன்னாள் போராளிகளை கட்சியில் உள்ளீர்ப்பது தொடர்பில் பேசியிருப்பது சிறிய ஆசுவாசப்படுத்தலைக் கொடுக்கின்றது.

ஆனால், அந்த ஆசுவாசப்படுத்தல் என்பது மேலோட்டமானதாக இருந்துவிடுமோ என்கிற அச்சமும் சேர்ந்தே எழுகின்றது. அது, தேர்தல் அரசியலும் அதுசார் நிகழ்ச்சி நிரலும் முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் ‘ஆலைக் கரும்புகளாகப் பாவித்துவிட்டு சக்கைகளாக வெளித்தள்ளிவிடுமோ’ என்கிற சந்தேகத்தின் போக்கில் எழுவது. ஆக, சந்தேகத்துக்கு அப்பால் எந்த அரசியல் கூற்றையும் எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லை என்கிற நிலையில், தமிழரசுக் கட்சியின் முன்னாள் போராளிகள் தொடர்பிலான தீர்மானத்தினையும் சற்று ஆழமாக ஆராயவேண்டியிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அகற்றத்துக்கு பின்னரான சூழலில், முன்னாள் போராளிகளில் குறிப்பிட்டளவானவர்கள் அரசியல் அரங்கில் நேரடியாக இயங்குவது தொடர்பில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த நேரடி அரசியல் இயங்குநிலை தங்களின் மீதான அச்சுறுத்தலையும் சந்தேகங்களையும் நீக்கம் செய்யும் என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனால், அதனை எங்கிருந்து எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையே இருந்தது. அது இன்னமும் தொடரத்தான் செய்கின்றது.

இறுதி மோதல்களின் பின்னர், முன்னாள் போராளிகளை ஒரு புள்ளியில் இணைத்து, அவர்கள் எதிர்கொள்கின்ற உடல், உள சிக்கல்களையும் வாழ்வாதாரம் என்கிற அடிப்படையையும் சீர்செய்து கொடுக்க வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசிய அரசியல் அரங்குக்கும் அதுசார் அனைத்துத் தளங்களுக்கும் இருந்தது. ஆனால், அந்தக் கடப்பாடு எந்தவொரு தருணத்திலும் நிறைவேற்றப்பட்டிக்கவில்லை. இது தொடர்பில் முன்னாள் போராளிகளின் ஆதங்கங்களை நாம் தொடர்ச்சியாக கண்டும் கேட்டும் வந்திருக்கின்றோம்.

முன்னாள் போராளிகள் பற்றிய உரையாடல், அவர்களின் வாழ்தலுக்கான அடிப்படைகளைச் சரிசெய்து முன்னோக்கிக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அவர்களை ஒரு பேசு பொருளாக மட்டுமே வைத்துக் கொண்டிருக்கின்றது. அதனூடு தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பில், அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புலம்பெயர் தளத்திலுள்ளவர்களும் குறிப்பிட்டளவில் காய்களை நகர்த்தியிருக்கின்றார்கள். அதற்கான காட்சிகளை நாம் கடந்த காலங்களில் கண்டோம். ‘விச ஊசி’ விடயத்தைத் தமிழ்த் தரப்பு எப்படி கையாண்டது என்பதே அதற்கான நல்ல சான்று. முன்னாள் போராளிகளை தமிழ்த் தேசிய அரசியல் எந்த இடத்தில் நிறுத்திவைத்திருக்கின்றது என்பதற்கான குறியீடாகவும் கொள்ள முடியும்.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான போராட்டமொன்று பல தரப்புகளினால் இணைந்து மூர்க்கமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புள்ளியிலிருந்து வெற்றிகரமான பக்கத்துக்கு நகருவதற்கு மறுக்கின்ற மனநிலையோடுதான் தமிழ்த் தேசிய அரசியல் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. அதனை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பிரதிபலிக்கின்றது. தமக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே ஆரோக்கியமுள்ள சனக்கூட்டமொன்றின் முன்னோக்கிய பயணத்தின் ஆரம்பம். ஆனால், அந்தப் பிரச்சினைகள் பற்றி உரையாடுவதையோ, அதற்கான தீர்வினைக் காண்பதையோ தவிர்ப்பது என்பது நோய்க்கூறுகளை அப்படியே வைத்துக் கொள்ள நினைக்கும் மனநிலையாகும். அது, செயற்திறனின்மையின் வெளிப்பாடு; தோல்விகளின் தொடர்ச்சிகளுக்கான அத்திவாரம்.

2015 பொதுத் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கும் இடையில் வெளிப்படையான சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்தச் சந்திப்பு இடம்பெற்ற தருணமும் சூழலும் பொருத்தமற்றது என்கிற போதிலும் அந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நடந்து கொண்ட விதம் எரிச்சலூட்டியது. குறிப்பாக, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நடந்து கொண்ட விதம் (அவரின் உடல்மொழி) முன்னாள் போராளிகளை கேவலப்படுத்தும் தோரணையில் இருந்தது. அது முன்னாள் போராளிகளின் அரசியலுக்கான உரிமையை மறுதலிக்கும் மனநிலையின் வெளிப்பாடாகவும் இருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மே தினக் கூட்டம் அம்பாறையின் ஆலையடிவேம்புப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (மே 1) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் அடங்கிய பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில், 13வது தீர்மானம், “முன்னாள் போராளிகள் சமூகத்தில் மீளிணைக்கப்படும் செயற்பாடு, சீரான முறையில் நடைபெறவேண்டும். அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு ஜனநாயக, அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்” என்கின்றது.

இந்தப் பிரகடனம் வாசிக்கப்படும் போது, இரா.சம்பந்தனுக்குப் பக்கத்தில் செல்வம் அடைக்கலநாதனும் அமர்ந்திருந்தார். முன்னாள் போராளிகளைத் தமது கட்சிக்குள் இணைத்துக் கொள்வதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்து அறிவிப்பை வெளியிட்டு இரண்டு நாட்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்திலும் முன்னாள் போராளிகள் குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

நாடு, மூன்று முக்கிய தேர்தல்களை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் எதிர்கொள்ளலாம். அதாவது, புதிய அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள். இதில், அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு நடைபெறுவது தொடர்பில் உறுதியாகக் கூற முடியாது. ஆக, அது தொடர்பில் கூட்டமைப்பு இப்போது அவ்வளவு கவனம் செலுத்தவில்லை. ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலும் மாகாண சபைத் தேர்தல்கள் வரும் ஆண்டிலும் நடைபெறவுள்ளன. அந்தத் தேர்தல்களை நோக்கி, முன்செல்ல வேண்டிய தேவையொன்று கூட்டமைப்புக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதனைத் தேர்தல் அரசியலில் நிராகரிக்கவும் முடியாது.

இப்போது உடனடியாக வரவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், ஏக அங்கிகாரம் பெறுவது தொடர்பில் கூட்டமைப்பு தன்னுடைய கவனத்தைச் செலுத்த எத்தனிக்கின்றது. ஏனெனில், அங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தம்மையொரு போட்டியாளராக களமிறக்கவுள்ளது. அத்தோடு, கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆளுகையையும் வைத்துக் கொண்டு, தனிப்பெரும் கட்சியாக முன்னேறுவது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்கு பெரும் ஆர்வம் உண்டு. அதில், எம்.ஏ.சுமந்திரன் முனைப்போடு செயற்பட்டு வருகின்றார். அதன்போக்கிலும் முன்னாள் போராளிகள் தொடர்பிலான அணுகுமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் மாகாண சபைத் தேர்தல்களிலும் முன்னாள் போராளிகள் சிலரைக் கூட்டமைப்பு தன்னுடைய வேட்பாளர்களாகக் களமிறக்கும். அதனூடு, தன்மீதான விமர்சனங்களை அல்லது அழுத்தங்களைப் பகுதியளவில் குறைத்துக் கொள்ளலாம் என்றும் கருதுகின்றது. அதனை, சரியான ஒழுங்கு முறையில் செய்வது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், தேர்தல்களில் வேட்பாளர்களாக ஒருசில முன்னாள் போராளிகளை அடையாளத்துக்காக நிறுத்திவிட்டு, அவர்கள் சார் வாழ்வியலை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிட்டு, நகர்வதற்கான முனைப்புகள் எழுந்தால் அது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அது, முன்னாள் போராளிகள் தற்போதுள்ள விரக்தி மனநிலையின் அளவினை அதிகரித்து வேண்டாத கட்டங்களை உருவாக்குவதற்கும் ஏதுகையாக அமையலாம்.

12,000 முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள். அவர்களோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்லது இரத்த உறவுகளாக 60,000- 100,000 பேர் இருக்கின்றார்கள். அதுபோல, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்கிற கணிசமான தொகையோடும் தமிழ் மக்கள் விடைகளைத் தேடி அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக, ஈழத்தமிழ் மக்களின் குறிப்பிட்டளவான பகுதியினரின் வாழ்க்கையோடு ஒவ்வொரு தருணமும் இரத்தமாகவும் சதையோடும் சம்பந்தப்படுகின்ற முன்னாள் போராளிகள் தொடர்பிலான அரசியல்- சமூக முடிவு என்பது சுயநல அரசியல்களுக்கும் குறும் வெற்றி வாதத்துக்கும் அப்பாலானதாக இருக்க வேண்டும். அது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டும்.

மாறாக, தீர்மானங்களின் ஒரு சரத்தாக அல்லது தேர்தல் மேடைகளில் பேச்சுகளாக மாத்திரம் முன்னாள் போராளிகள் கையாளப்பட்டுவிட்டு, நிராகரிக்கப்பட்டால் அவர்களின் நிலை இன்னும் மோசமானதாக மாறும். அதனை, தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

4TamilMedia

0 comments :

Post a Comment

 
Toggle Footer